அமைச்சர் மணிகண்டன் நிகழ்ச்சி ரத்தும் மாவட்டக் கல்வி அதிகாரி மாற்றமும்! - ராமநாதபுரம் பரபரப்பு | Ramnad district educational officer put into waiting list

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/06/2019)

கடைசி தொடர்பு:21:00 (07/06/2019)

அமைச்சர் மணிகண்டன் நிகழ்ச்சி ரத்தும் மாவட்டக் கல்வி அதிகாரி மாற்றமும்! - ராமநாதபுரம் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அமைச்சர் மணிகண்டன் பங்கேற்க இருந்த விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மணிகண்டன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சி.இ.ஓ அய்யணன்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் இவை வழங்கப்படவில்லை. இன்று இதற்கான விழா ராமநாதபுரம், திருப்புல்லாணி மற்றும் திருவாடானை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற உள்ளதாகவும், இதில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்று மடிக்கணினிகளை வழங்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை ராமநாதபுரத்தில் உள்ள புனித அந்திரேயா பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் மணிகண்டன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணனும் பங்கேற்றிருந்தார். அதேநேரம், திருப்புல்லாணி மற்றும் திருவாடானைப் பகுதிகளில் நடக்க இருந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றும் அய்யணன் திடீரென மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுத்து உடனடியாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். 

இந்த ஆண்டுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்னும் துவங்கி வைக்காதநிலையில், ராமநாதபுரத்தில் இலவச மடிக்கணினி அமைச்சர் மணிகண்டன் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் அடுத்து நடக்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதுடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் சம்பவங்களால் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் தந்தையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் மணிகண்டன் சென்றதால் மற்ற இடங்களில் மடிக்கணினி விழா ரத்து செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது.