`நம்மாழ்வார், நெல் ஜெயராமனுக்குப் பிறகும் தொடரும் நெல் திருவிழா!' - இயற்கை விவசாயிகள் நெகிழ்ச்சி | Farmers express happy about paddy festival

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (07/06/2019)

கடைசி தொடர்பு:21:40 (07/06/2019)

`நம்மாழ்வார், நெல் ஜெயராமனுக்குப் பிறகும் தொடரும் நெல் திருவிழா!' - இயற்கை விவசாயிகள் நெகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நெல் திருவிழா, இயற்கை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எழுச்சி நாளாகவே திகழ்கிறது. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துகொள்வது வழக்கம்.

இவ்விழாவை முன்னின்று நடத்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மறைவுக்குப் பிறகு, நெல் ஜெயாரமன் இவ்விழாவை தொடர்ச்சியாக நடத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் சில மாதங்களுக்கு முன்பு காலமானதால், இனி இவ்விழா நடைபெறுமா எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான் நாளை காலை தொடங்கப்படும் நெல் திருவிழா, இரண்டு நாள்களுக்கு சிறப்பாக நடைபெற உள்ளது.

நெல் திருவிழா

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்கள் வழக்கத்தில் இருந்தன. வறட்சியைத் தாங்கக்கூடியவை, மழை, வெள்ளத்தில் தாக்குப்பிடித்து வளரக்கூடியவை, பலவிதமான நோய்களைத் தீர்க்கக்கூடியவை எனப் பலவிதமான மகத்துவங்கள் நிறைந்திருந்தும் காலப்போக்கில் இவைகள் காணாமல் போயின. அழிந்துபோன நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளிடம் பரவலாக்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தீவிரமாகக் களமிறங்கினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நெல் திருவிழாவை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியைத் தொடங்கினார். இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் இவ்விழாவில் வழிகாட்டப்பட்டன. பசுமை விகடன் வழங்கிய ஊடக ஆதரவினால், இவ்விழா விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இவ்விழா நடைபெற, நம்மாழ்வாரின் சீடரும் இயற்கை விவசாயியுமான நெல் ஜெயராமன், துணையாக இருந்து தீவிரமாகக் களப்பணியாற்றினார்.

நம்மாழ்வாரின் மறைவுக்குப் பிறகும் நெல் திருவிழவை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தி, பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தார். புற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோதும்கூட, கடந்த ஆண்டு நெல் திருவிழாவை சிறப்பாக நடத்தி, விவசாயிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

நெல் திருவிழா

சில மாதங்களுக்கு முன் நெல் ஜெயராமன் காலமானார். உயரிய நோக்கத்தோடு நடத்தப்பட்டு வந்த இவ்விழா, எக்காரணம் கொண்டும் நின்றுவிடக் கூடாது என இயற்கை விவசாயிகள் கவலை கொண்டார்கள். இந்நிலையில் இவர்களது உறுதுணையுடன் கிரியேட் - நமது நெல்லை காப்போம் அமைப்பினர் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய இரு நாள்கள் நெல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். முன்னோடி இயற்கை விவசாயிகள், வேளாண் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் உரையாற்றுகிறார்கள். நம்மாழ்வார், நெல் ஜெயாரமன் மறைவுக்குப் பிறகும்கூட இவ்விழா நடைபெறுவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.