ஆற்றில் ஊற்றப்பட்ட 5,500 லிட்டர் ஆவின் பால்! - விஸ்வரூபம் எடுக்கும் ஆரணி பால் கலப்பட விவகாரம் | 600 liters of water mixed in aavin milk at Arani

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (08/06/2019)

கடைசி தொடர்பு:09:15 (08/06/2019)

ஆற்றில் ஊற்றப்பட்ட 5,500 லிட்டர் ஆவின் பால்! - விஸ்வரூபம் எடுக்கும் ஆரணி பால் கலப்பட விவகாரம்

ஆவினுக்கு அனுப்பப்பட்ட பாலில் தினமும் 300 லிட்டர் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டதால் ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்க கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்,  ‘ஆரணி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம்’ இயங்கி வருகிறது. இதில் நிர்வாக குழு தலைவர் குமுதவள்ளி, செயலாளர் சரவணன், பொறுப்பாளர் பழனி (பி.எம்.சி) உட்பட 9 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் அனுப்பப்படும் பாலில், கடந்த சில ஆண்டுகளாகவே தினமும் 300 லிட்டர் தண்ணீர் கலந்துவந்திருப்பது, இப்போது  தெரியவந்துள்ளது.
 
கடந்த மாதம் 29-ம் தேதி ஆரணி கூட்டுறவுச் சங்கத்திலிருந்து, டேங்கர் லாரி மூலமாகச் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் நிலையத்திற்கு 5,500 லிட்டர் பால் அனுப்பப்பட்டது. அந்த பாலை பரிசோதனை செய்தபோது அதில் 600 லிட்டர்  தண்ணீர் கலப்படம் செய்து தரமற்ற முறையில் இருப்பது தெரிந்து, அந்த பால் மீண்டும் ஆரணிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதோடு தரமற்ற முறையில் பாலை அனுப்பியதால் கூட்டுறவுச் சங்கத்திற்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த நிலையில், திருப்பி அனுப்பப்பட்ட 5, 500 லிட்டர் பாலையும் யாருக்கும் தெரியாமல் ஆரணி ஆற்றில் ஊற்றி அழித்துள்ளனர் சங்க நிர்வாகிகள் சிலர்.

ஆரணி பால் உற்பத்தியாளார்கள் கூட்டுறவு சங்கம்

இதனையடுத்து, சங்க நிர்வாகிகள் இடையே 3 லட்சம் ரூபாயை யார் கட்டுவது என்ற போட்டி நிலவியுள்ளது. அதன் பிறகே, இந்த விவகாரம் தலைவர் குமுதவள்ளி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமுதவள்ளி கடந்த 2-ம் தேதி அன்று ஆரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில்,  குளிர்விப்பு மையத்தில் சேகரித்த பாலில் 600 லிட்டர் தண்ணீரை யாரோ கலந்துள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். குளிர்விப்பு அறையின் சாவி சரவணன், பழனி மற்றும் இரவு காவலர் கோவிந்தசாமி இவர்களிடம் மட்டுமே உள்ளது என்று புகார் கொடுத்தார். புகார் கொடுத்த அடுத்த  நாளே, துறை ரீதியாக நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி புகாரைத் திரும்ப வாங்கிக்கொண்டார். இந்நிலையில், கடந்த 6 -ம் தேதி, வேலூர் ஆவின் துணை பொது மேலாளர் உலகநாதன், ஆரணி பால் உற்பத்தி கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் அனைவரையும் வரவழைத்து ஆய்வு நடத்தினார். ஆய்வில் பாலில் 600 லிட்டர்  தண்ணீர் கலந்ததும், திருப்பி அனுப்பப்பட்ட பாலை ஆற்றில் ஊற்றி அழித்ததும் உண்மைதான் எனத் தெரியவந்தது. 

இதையடுத்து, ஆரணி பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழுத் தலைவர் குமுதவள்ளி, செயலாளர் சரவணன், பி.எம்.சி பொறுப்பாளர் பழனி, இரவு காவலர் கோவிந்தசாமி ஆகிய நான்கு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  சில ஆண்டுகளாக அம்பத்தூர் ஆவின் நிலையத்திற்கு அனுப்பும் பாலில் தினமும் 300 லிட்டர் தண்ணீர் கலந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்குக் காரணமாக இருந்த செயலாளர் சரவணன், பி.எம்.சி பொறுப்பாளர் பழனி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள்  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் இதில் சங்கத் தலைவர் குமுதவள்ளியும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறுகின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க