அச்சுறுத்தும் நிபா வைரஸ்! - தேனி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு | Nipah virus special ward set uped in Theni government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:11:30 (08/06/2019)

அச்சுறுத்தும் நிபா வைரஸ்! - தேனி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில், நிபா வைரஸ் தாக்குதலை எதிர்க்கொள்ளும் விதமாக, முன்னெச்சரிக்கையாக எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது மாவட்ட நிர்வாகம். கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் சுகாதரத்துறையினர், எல்லை கடந்து தமிழகத்திற்கு நுழையும் வாகனங்களில் சோதனை செய்துவருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் சிகிச்சை சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய டீன் ராஜேந்திரன், ``கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கே சிறப்பு சிகிச்சை வார்டு  தொடங்கப்பட்டுள்ளது. 20 முதல் 25 பேர் வரை தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும். 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான மருந்துகள் இருப்பு உள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

இதுவரை தேனியில் நிபா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளோடு யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனை,  சுகாதார நிலையங்களை அலர்ட் செய்துள்ளோம். யாரேனும் நிபா வைரஸ் தாக்குதலோடு வந்தால், உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.