`நீதித்துறை உத்தரவை நீதித்துறையே பின்பற்றுவதில்லை!' - நீதிபதி வேதனை | Madras HC madurai bench express displeasure over not following orders of the court

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (08/06/2019)

கடைசி தொடர்பு:12:00 (08/06/2019)

`நீதித்துறை உத்தரவை நீதித்துறையே பின்பற்றுவதில்லை!' - நீதிபதி வேதனை

வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை விலக்கக் கோரிய மனுவை விசாரணைப் பட்டியலில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனைப் பின்பற்றாதது வேதனை அளிப்பதாக, நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தேனியைச் சேர்ந்த திருமலைக் குமாரசாமி என்பவர், கடந்த 2011-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்  தாக்கல் செய்தார். அதில், ''தேனி மாவட்ட நூலகத்தில் இளநிலை உதவியாளராக 1998-ல் பணியில் சேர்ந்தேன். 2007-ல் உதவியாளராகப் பதவி உயர்வுபெற்றேன். 2010-ம் ஆண்டு  என்னை சென்னைக்கு இடமாற்றம் செய்து பொது நூலகத்துறை இயக்குநர்  உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். இடமாறுதலுக்குத் தடை விதிக்க வேண்டும்" என அம்மனுவில் கோரியிருந்தார். இதையடுத்து, 2012-ம் ஆண்டு நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், இடமாற்றம் தொடர்பான பொது நூலகத்துறை இயக்குநரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சுமார் எட்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழக்கை விசாரணை செய்தார். அப்போது, ``மனுதாரர், நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, எட்டரை ஆண்டுகளாக தேனி அலுவலகத்திலேயே பணிபுரிந்தும்வருகிறார். இடமாறுதல் என்பது  பணி விதிகளில் ஒன்றாகும். இடமாறுதல் செய்யப்படும் இடத்தை சம்பந்தப்பட்ட ஊழியர் முடிவுசெய்ய முடியாது. இடமாறுதல் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர குறிப்பிட்ட காரணங்கள் மட்டுமே உண்டு. இடமாறுதல் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீதான நீதித்துறை ஆய்வு சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருக்க வேண்டும். நிர்வாகக் காரணங்களுக்காக வழக்கமாகச் செய்யப்படும் இடமாறுதலில் உயர் நீதிமன்றம் தலையிட்டால், நிர்வாகப் பணிகளில் பாதிப்பு ஏற்படும். இதனால், நிர்வாக காரணங்களுக்காகச் செய்யப்படும் இடமாறுதல்களை எதிர்த்து வழக்குத் தொடர்வதை உயர் நீதிமன்றம் ஊக்குவிக்கக் கூடாது” என்ற நீதிபதி, ``இந்த வழக்கைப்  பொறுத்தவரை, மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்று  எட்டரை ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார். மனுதாரர், தனது இடமாறுதல் உத்தரவு நூலக ஆணைய சட்டத்துக்கு  எதிரானது எனக் கூறியுள்ளார். ஆனால், பிற அரசு ஊழியர்களுக்கான சலுகையை  இப்போதுவரை பெற்றுவருகிறார். மனுதாரரின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் இடமாறுதல் செய்யப்பட்ட இடத்தில் பணியில் சேர வேண்டும். அங்கு பணியிடம் காலியாக இல்லாவிட்டால், மனுதாரரை வேறு இடத்துக்கு 4 வாரத்தில் இடமாறுதல் செய்ய வேண்டும்.” என்றார்.

மேலும், ``இந்த வழக்கில், பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்கக்கோரி, நூலகத்துறை சார்பில் 2012-ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவிற்கு வழக்கு எண் வழக்கப்பட்டும், கடந்த 7 ஆண்டுகளில் ஒரு முறைகூட விசாரணைக்கு வரவில்லை. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்கக் கோரும் மனுக்களை 2 வாரத்தில் பரிசீலித்து, மனு சரியாக இல்லாத நிலையில், மீண்டும் வழக்கு எண் வழங்க வேண்டும். வழக்கு எண் வழங்கப்பட்ட இரண்டு வாரத்தில், மனு விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்.

இரண்டு வாரத்தில் தடையை விலக்கோரும் மனுக்களை விசாரணைக்குப் பட்டியலிடாத அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. இதைப் பின்பற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார். இருந்தபோதும், இந்த உத்தரவை உயர் நீதிமன்ற பதிவுத்துறை பின்பற்றுவதில்லை. நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையே பின்பற்றாதது வேதனையானது. நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்குப் பட்டியலிடுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும்  உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவுகளை உயர் நீதிமன்றங்களில் உள்ள பதிவுத்துறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிறப்பிக்கப்படும் இடைக்கால உத்தரவுகளை நீக்க கோரும் மனுவை கிடப்பில் போடுவது குறித்த நீதிபதியின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.