`தனியார் ஆலைகளிடமிருந்து கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்!' - ராமநாதபுரம் கலெக்டருக்குச் சென்ற புகார் | Activist file complaint against private companies that affects sea creatures in Ramnad

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (08/06/2019)

கடைசி தொடர்பு:13:10 (08/06/2019)

`தனியார் ஆலைகளிடமிருந்து கடல்வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்!' - ராமநாதபுரம் கலெக்டருக்குச் சென்ற புகார்

அரிய வகை கடல்வாழ்  உயிரினங்களுக்குக் கேடு ஏற்படுத்தும் வகையில், ஆலைக் கழிவுகளைக் கடலில் கலக்கும் தனியார் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிநோக்கம் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்கள் அழிவுக்கு காரணமாகும் ஆலை கழிவுநீர்

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில், அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின்மூலம் பல ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்திசெய்யப்பட்டுவருகிறது. இதையொட்டி, வாலிநோக்கம் கடற்கரைப் பகுதியில் சில தனியார் நிறுவனங்களும் உப்பு உற்பத்தி மற்றும் புரோமின் எனப்படும் உலோக உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கென வாலிநோக்கம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தத் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், நேரடியாகக் கடலில் விடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாக்யநாதன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில், ``வாலிநோக்கம் பகுதியில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான புரோமியம் தயாரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாகக் கடலில் விடப்படுகிறது. இதனால், மன்னார் வளைகுடா கடலில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும், கடலில் விடப்படும் கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றம் வீசுவதுடன், அதனைச் சுவாசிக்கும் கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு விதிகளைக் கடைப்பிடிக்காமல் செயல்படும் தனியார் உப்பு நிறுவனங்களை முறையாக ஆய்வுசெய்து ஆலைக் கழிவினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கடல் வாழ் உயிரினங்களையும், கிராம மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டுள்ளது.