`அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை கூடாது!' - ராஜன் செல்லப்பா போர்க்கொடி | MLA Rajan chellappa speaks about ADMK loss in Lok sabha elections

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (08/06/2019)

கடைசி தொடர்பு:12:51 (08/06/2019)

`அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை கூடாது!' - ராஜன் செல்லப்பா போர்க்கொடி

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க-வில் கடுமையான குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி கேட்டு தோப்பு வெங்கடாச்சலம் போன்ற எம்.எல்.ஏ-க்கள் கலகத்தை ஏற்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். இதில், எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுவருகிறது. இதனால், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.

ராஜன் செல்லப்பா

இந்த நிலையில், இன்று மதுரையில் திடீரென்று செய்தியாளர்களை அழைத்துப் பேசிய மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க தலைமைக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜன் செல்லப்பா, ``எங்கள் கட்சித் தலைமைக்கு செய்தியாளர்களான உங்கள்மூலம் சில கருத்துக்களை தெரிவிக்கவே அழைத்துள்ளேன். இதையேதான், பொதுக்குழுவில் என்போன்ற பல எம்.எல்.ஏ-க்கள் பேச உள்ளனர். கட்சி ஏன் தோல்வியுற்றது என்பதை இன்னும் ஆய்வுசெய்யவில்லை. கட்சித் தொண்டர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லை. தொண்டர்களின் ஆலோசனையைக் கேட்டால்தான் கட்சியும் ஆட்சியும்  நிலையாக இருக்கும்.

இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது.  மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் உள்ளவர் அ.தி.மு.க தலைவராக வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. இதை நான், தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராகக் கூறவில்லை. தொண்டர்களின் கருத்தையே கூறுகிறேன். 

ராஜன் செல்லப்பா

தேர்தல் தோல்விக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஈர்ப்பு சக்தி இல்லாத தலைவர்கள்தான் காரணம். இதுவரை வெற்றிபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 9 பேரும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வெற்றியை சமர்ப்பித்து அஞ்சலிசெலுத்தவில்லை. இவர்களைத் தடுப்பது யார்? கட்சியை வழிநடத்துபவர்கள் அதைச் சொல்ல வேண்டாமா? நான் ஒன்றும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இப்படிப் பேசவில்லை. எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்தக் கட்சியும் ஆட்சியும் நீண்டகாலம்  நீடிக்க வேண்டும் என்பதால் ஆதங்கத்தில் கூறுகிறேன்" என்று பேசினார். ராஜன் செல்லப்பாவின் பேச்சு, தற்போது அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க