”பராமரிப்பு இல்லாத பார்க்கிங் ஏரியாவுக்கு 10 ரூபாய் வசூல்!” - மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரச்னை | Recurring parking issue at Madurai Meenakshi temple premises

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (08/06/2019)

கடைசி தொடர்பு:15:25 (08/06/2019)

”பராமரிப்பு இல்லாத பார்க்கிங் ஏரியாவுக்கு 10 ரூபாய் வசூல்!” - மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரச்னை

"டூவீலருக்கு 10 ரூபாய் வாங்குறாங்க. வண்டியில இருக்கிற பொருள்களுக்கு பொறுப்பேற்காவிட்டால் பரவாயில்லை. 'நிர்வாகம் வண்டிகளுக்கே பொறுப்பேற்காது'ன்னு போர்டு வச்சிருக்காங்க. பொறுப்பேத்துக்காத வண்டிக்காக எதற்கு 10 ரூபாய்?"

”பராமரிப்பு இல்லாத பார்க்கிங் ஏரியாவுக்கு 10 ரூபாய் வசூல்!” - மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரச்னை

துரை புதுமண்டபத்தை அடுத்துள்ள எழுகடல் தெருவில், மீனாட்சியம்மன் கோயிலின் உபகோயிலான காஞ்சனமாலை அம்மன் கோயில் உள்ளது. பிளாஸ்டிக் பொருள்கள் விற்கும் வணிக வளாகமும் இங்கே அமைந்துள்ளது. இந்த வளாகத்தினுள், கோயிலுக்குச் சொந்தமான டூவீலர் பார்க்கிங் ஒன்று இருக்கிறது. 

நகரிலேயே மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான டூவீலர் பார்க்கிங்குகள் தெப்பக்குளம் பகுதியிலும், இந்த வளாகப் பகுதியிலும் மட்டுமே உள்ளன. இந்த எழுகடல் தெரு, டூவீலர் பார்க்கிங் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் 300 டூவீலர்களைத் தாராளமாக நிறுத்தும் அளவுக்கு இடவசதி உள்ளது. புதுமண்டபம், வணிக வளாகம், ராஜ்மஹால் ஜவுளிக்கடை உள்ளிட்ட இடங்களில் பணிக்கு வருவோர், இங்கே வழக்கமாக பார்க்கிங் செய்கின்றனர். ஆனாலும், புதுமண்டபம் நந்தி சிலை அருகே, சாலையோரங்களில்தான் பெரும்பாலானோர் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். பார்க்கிங் வசதி இருக்கும்போது ஏன் சாலைகளில் நிறுத்துகிறார்கள் என விசாரித்தோம்.

வழக்கமாக அங்கு வரும் வாகன ஒட்டி ஒருவர் கூறுகையில், "டூவீலருக்கு 10 ரூபாய் வாங்குறாங்க. வண்டியில இருக்கிற பொருள்களுக்குப் பொறுப்பேற்காவிட்டால் பரவாயில்லை. 'நிர்வாகம் வண்டிகளுக்கே பொறுப்பேற்காது'ன்னு போர்டு வச்சிருக்காங்க. பொறுப்பேத்துக்காத வண்டிக்காக எதற்கு 10 ரூபாய்? இப்போ, பார்க்கிங் ஏரியாவுல வேலை நடந்துட்டு இருக்குன்னு, தகரத்தில்தான் மறைவு ஏற்படுத்தி இருக்காங்க. எதற்கு காசையும் கொடுத்திட்டு பாதுகாப்பில்லாத இடத்துல நிறுத்தணு?" என்று கேள்வி எழுப்பினார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பார்க்கிங்

கடைக்கு வந்த பெண் ஒருவர், "நான் ரோட்டுலதான் ஸ்கூட்டியை நிறுத்தியிருக்கிறேன். ஒண்ணு இலவச பார்க்கிங் ஆக்கணும். இல்லாட்டி முறையான பாதுகாப்பு வசதி செய்யணும். குறைந்தபட்சம் கட்டணத்தையாவது குறைக்கணும். எதுவுமே இல்லாம விதிமுறைகள் மட்டும் எதுக்கு? உடனே இதுக்குத் தீர்வுகாணணும்" என்றார்.

புதுமண்டபம் கடைக்காரர்களிடம் பேசியபோது, "ரோட்டுலயாச்சும் சி.சி.டி.வி கேமரா இருக்குங்க. வண்டி தொலைஞ்சுபோனாலும், நம்பி மதுரை நடராஜன்போலீஸிடம் புகார் சொல்லலாம். அந்த பார்க்கிங் ஸ்டாண்டுல எந்த வசதியும் இல்லை. காசு மட்டும் வாங்குறாங்க" என்று கொதித்தார். மிதிவண்டிக்கு 5 ரூபாய், டூவீலர்களுக்கு 10 ரூபாய் என கட்டணம் வசூல் செய்கின்றனர். காலை 8 மணி தொடங்கி இரவு 9 மணிவரை பார்க்கிங் டைம். இரண்டு ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த ஸ்டாண்டிற்கு தோராயமாக மாதம் 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இருந்தபோதிலும் எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. வசூல் மட்டும் தொடர்ந்து நடக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் இதுகுறித்துப் பேசினோம். "போர்டுல எழுத்துப்பிழை இருந்திருக்கும். மற்றபடி வாகனங்களுக்கு பொறுப்பெடுத்துத்தான் பார்க்கிங் ஸ்டாண்டு நடத்துறோம். காம்பவுண்டு சுவர் கட்டும் பணி தற்போது நடந்திட்டு இருக்கு. முடிந்ததும் எல்லாம் சரியாகிடும்" என்றார். பார்க்கிங் கட்டணம் குறித்து கேட்டதற்கு, "நகரின் முக்கியப் பகுதியில இருக்கிற பார்க்கிங் இடம். பராமரிப்புப் பிரச்னைகள் எல்லாம் இருக்கு. அதனால், கட்டணத்தைக் குறைக்க வாய்ப்பில்லை" என்றார் கறாராக.

மெட்ரோ நகரம். சென்னைக்கு நிகராக வாகன நெரிசல் பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது மதுரை. இந்தச் சூழலில் இதுபோன்ற முக்கிய இடங்களில் ஏற்படும் பார்க்கிங் சிக்கல்கள், வாகன நெரிசல் பிரச்னைகளுக்கு மறைமுகக் காரணமாக அமையும். ஏற்கெனவே, மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டிருக்கும் நிலையில், வாகனங்கள் பார்க்கிங் சிக்கல் விவகாரம் புதிய பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்