`நிபா வைரஸ் பரவிவருவது கவலை அளிக்கிறது!' - குருவாயூரில் உருகிய மோடி | Narendra Modi speech in Guruvayur BJP meeting

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:14:30 (08/06/2019)

`நிபா வைரஸ் பரவிவருவது கவலை அளிக்கிறது!' - குருவாயூரில் உருகிய மோடி

`கேரளத்தில் நிபா வைரஸ் பரவிவருவது கவலை அளிக்கிறது. மத்திய அரசு, நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மக்களுடன் மத்திய அரசு துணை நிற்கும்' என பிரதமர் மோடி குருவாயூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மோடி

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி, இன்று குருவாயூர் கிருஷ்ணன்  கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் கேரள பி.ஜே.பி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடந்த அபிநந்தன் தினம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, ``சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் குருவாயூரப்பனின் அனுக்கிரகம் கிடைக்கட்டும்'' என மலையாளத்தில் பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ``குருவாயூரப்பனை தரிசிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.

மோடி

கிருஷ்ணர் அவதரித்த துவாரகை அமைந்துள்ள குஜராத்தில் இருந்து நான் குருவாயூர் கிருஷ்ணனை தரிசிக்க வந்திருக்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்த நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கேரளாவில், பி.ஜே.பி-க்கு அக்கவுன்ட் திறக்க முடியவில்லை. பின்னர் ஏன் பிரதமர் கேரளா சென்று மக்களுக்கு நன்றி சொல்லப்போகிறார் என சிலர் நினைக்கலாம். அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு செல்வதே பி.ஜே.பி அரசு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பி.ஜே.பி நிர்வாகிகள் தேர்தலை மட்டும் லட்சியமாகக்கொண்டு செயல்படுபவர்கள் அல்ல. ஆண்டின் அத்தனை நாள்களும் மக்களுக்காகப் பணி செய்பவர்கள். நாட்டை முன்னேற்றுவதுதான் பி.ஜே.பி நிர்வாகிகளின் லட்சியம்.

5 ஆண்டுகளுக்கு மக்கள் பணி செய்வதற்காகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாம் காலம் முழுவதும் மக்களுக்காக சேவை செய்பவர்கள். மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, பல்வேறு பணிகளைச் செய்து புதிய இந்தியாவை உருவாக்கும் பணியைச் செய்கிறோம்.

மோடி

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் இடம் கேரளா. கடந்த 5 ஆண்டுகளில், சுற்றுலாத்துறையில் மிகச்சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால்தான், உலக சுற்றுலா வரிசையில் மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. குருவாயூர் கோயிலுக்கு வந்துவிட்டு, அங்குள்ள யானைகள் குறித்து கூறாமல் இருக்க முடியாது. இறைவன் குறித்து நினைக்கும்போது, இறைவனின் வாகனமான மிருகங்களை நாம் நினைக்காமல் இருக்க முடியாது. பி.ஜே.பி அரசு, விலங்குகளுக்கும் மீன்பிடி தொழிலுக்கும் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விலங்கினங்கள் மடிவதற்கு கடந்த காலங்களில் நோய் பாதிப்பு முக்கியப் பிரச்னையாக இருந்தது. விலங்குகளின் நோயைத் தடுக்க நமது அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவிவருவது கவலை அளிக்கிறது. மத்திய அரசு, நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மக்களுடன் மத்திய அரசு துணை நிற்கும். நிபா தாக்குதலில் இருந்து மீள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும். மத்திய அரசு, ஏழைகளின் சிகிச்சைக்காக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ உதவிக்காக 'ஆயுஷ்மான் பவ' திட்டம் கொண்டுவந்துள்ளோம். கேரள அரசு இந்தத் திட்டத்தில் சேராததால், இங்குள்ள மக்கள் அந்த திட்டத்தின் பலனைப் பெற முடியாது. எனவே, கேரள அரசு ஆயுஷ்மான் பவ திட்டத்தில் இணைய வேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 

​​​​