1000 மாணவர்கள்... 500 மரக்கன்றுகள்! - கரூர் பள்ளி நிர்வாகத்தின் அசத்தல் 'அடர்வன' முயற்சி | karur school students planted 500 saplings in one day

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:16:30 (08/06/2019)

1000 மாணவர்கள்... 500 மரக்கன்றுகள்! - கரூர் பள்ளி நிர்வாகத்தின் அசத்தல் 'அடர்வன' முயற்சி

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1000 மாணவர்களைக்கொண்டு, 500 மரக்கன்றுகளை நடவைத்து பிரமாண்டம் காட்டியிருக்கிறது. 

 மரக்கன்றுகள் நட்டபோது...

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது மணவாடி. இந்த கிராமத்தில் இயங்கிவரும் பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள். தமிழகத்திலேயே அதிகமான வெயில் அடிக்கும் மாவட்டமாக முன்பு வேலூர் மாவட்டத்தைச் சொல்வார்கள். இப்போது, அந்த மாவட்டம் பின்னுக்குச் சென்றுவிட, அதிகம் வெயில் அடிக்கும் மாவட்டமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது கரூர் மாவட்டம். 100 டிகிரிக்கு குறையாமல் இங்கே வெயில் அடிக்கிறது. அதிகபட்சமாக, 110 டிகிரி வரை அடித்து, மக்களை வெளியில் தலைகாட்டவிடாமல் முடக்கிப்போட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், இங்கே அதிகம் மழை பொழியாததுதான். கரூர் மாவட்டத்தில் அதிக வெயில் அடிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாடியில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் அடர்வனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தங்கள் பள்ளியில் படிக்கும் 1000 மாணவ மாணவிகளைக்கொண்டு, ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகளை நடவைத்து, பிரமாண்டம் காட்டி இருக்கிறது. 

மரக்கன்றுகள் நட்டபோது.....

இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பள்ளி நிர்வாகி ஒருவர்,``ஒரு மாவட்டம் செழிப்பா இருப்பதற்கு அத்தாட்சி, அந்த மாவட்டத்தில் 32 சதவிகிதம் காடுகள் இருக்கணும்ங்கிறதுதான். ஆனா, கரூர் மாவட்டத்தில், வெறும் 4 சதவிகிதம்தான் காடுகள் இருக்கு. அதுல, 2 சதவிகிதம் காடுகள் கடவூர் பகுதிகள்ல உள்ள மலைகளில்தான் உள்ளது. அதோடு, கரூர் மாவட்டம் மானாவாரி நிலங்களை அதிகம் கொண்ட வறட்சியான மாவட்டம். இங்கே உள்ள மண், சுண்ணாம்பு மண் என்பதால், அதிகம் மழைபெய்யாது. ஆனால், இந்த மாவட்டத்தைப் பசுமையான மாவட்டமாக மாற்ற, கரூர் மாவட்ட நிர்வாகம் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியிருக்கு. நாங்களும் எங்க பங்குக்கு கரூரை பசுமையாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதோட வெளிப்பாடுதான், இந்த பிரமாண்ட மரக்கன்றுகள் நடும் விழா.

மரக்கன்றுகள் நட்டபோது....

1000 மாணவர்களை வைத்து, 500 மரக்கன்றுகளை நடவைத்திருக்கிறோம். புங்கன், வேம்பு, பூவரசுனு அதிகம் நாட்டு மரக்கன்றுகளைதான் நடவைத்திருக்கிறோம். வெறுமனே போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலை இல்லை. மாணவர்கள் மூலம் வைக்கப்பட்ட 500 மரக்கன்றுகளில் ஒன்றைக்கூட சோடையாக்கவிடாமல், அத்தனை மரக்கன்றுகளையும் மரமாக்கும் லட்சியத்தோடு இருக்கிறோம். முதலில் அத்தனை மரக்கன்றுகளுக்கும் பாதுகாப்பு செய்திருக்கிறோம்.

நீர்பாய்ச்சுவதில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக, எல்லா மரக்கன்றுகளுக்கும் தகுந்த நீர்வசதி செய்து, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்பாய்ச்ச முடிவு பண்ணியிருக்கிறோம். 500 மரக்கன்றுகளும் மரமானால், இங்கே ஒரு ஓர் அடர்வனம் உருவாகும். அதன்மூலம், எங்க பள்ளியைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவம் தப்பாமல் மழைபெய்யும். இதுபோல், மாவட்டம் முழுக்க பல அடர்வனங்களை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். 1000 மாணவர்களுக்கும் இந்த முயற்சி மூலமா, சுற்றுச்சூழல் சம்பந்தமான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறோம்" என்றார் மகிழ்ச்சியாக.