விருதுநகர் அருகே கிடைத்த இசைக் கலைஞர்களின் நடுகல் சிற்பம்! | 17th century sculpture spotted near Virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/06/2019)

கடைசி தொடர்பு:18:00 (08/06/2019)

விருதுநகர் அருகே கிடைத்த இசைக் கலைஞர்களின் நடுகல் சிற்பம்!

விருதுநகர் அருகே, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு இசைக் கலைஞர்களின் கற்சிற்பத்தை அருங்காட்சியக ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.

விருதுநகர் அருகே, ஆர்.ஆர்.நகரில் உள்ள இரயில்வே லைன் அருகே கிடந்த நடுகல் சிற்பத்தை, விருதுநகர் அரசு அருங்காட்சியக ஊழியர்கள் ஆய்வுசெய்தனர். அந்த நடுகல் சிற்பத்தில், முழங்கால் வரை ஆடை அணிந்தும், தலையலங்காரத்துடன், தோள்பட்டை வரை நீண்ட துளையுள்ள காதணிகளை அணிந்த நிலையில், இரண்டு பேர் நிற்பதுபோன்று காணப்படுகிறது.

இசைக்கலைஞர்

இதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாளர் கிருஷ்ணம்மாள் கூறும்போது, ``உயிரிழந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நடுகல் பழக்கம் மிகப்பழங்காலத்தில் இருந்தே இருந்துள்ளது. ஆர்.ஆர்.நகர் அருகே பராமரிப்பின்றி கிடந்த நடுகல்லை ஆய்வுசெய்தோம். இந்த நடுகல் சிற்பம், இரண்டு இசைக் கலைஞர்களைக் குறிக்கிறது. இந்த இரண்டு கலைஞர்களும் தங்கள் கைகளைக் கூப்பிய நிலையில், உறுமி மற்றும் முரசு ஆகிய கருவிகளை இடுப்பில் கட்டியுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும், தண்டோரா போடுபவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். அவர்களின் நினைவாக இந்தச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகல்லில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளை ஆய்வுசெய்ததில், 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கற்சிற்பங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது'' என்று தெரிவித்தார்.