“நாய்க்குட்டிக்காக நடந்த மோதல்; பொள்ளாச்சி பார் நாகராஜ் கைது!” | Pollachi police arrested bar nagaraj

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/06/2019)

கடைசி தொடர்பு:17:00 (08/06/2019)

“நாய்க்குட்டிக்காக நடந்த மோதல்; பொள்ளாச்சி பார் நாகராஜ் கைது!”

பொள்ளாச்சியில், நாய்க்குட்டிக்காக இருதரப்பு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக,  பார் நாகராஜ் உள்ளிட்ட 14  நபர்களை பொள்ளாச்சி கிழக்கு போலீஸார்  கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

பார் நாகராஜ்

கோவை சுந்தராபுரம் விநாயகர் கோயில்  வீதியைச் சேர்ந்தவர், சிபின்.  பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில்  தங்கியிருந்து பொள்ளாச்சியில்  உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சிபினுக்கும் பொள்ளாச்சி  ஊத்துக்காடு சாலையைச் சேர்ந்த  சபரீஸுக்கும்   இடையே  பணம் கொடுக்கல்வாங்கல் இருந்துள்ளது.  சிபின், தனக்குத் தரவேண்டிய பணத்தை சபரீஷ் நீண்ட  நாட்களாகக் கேட்டுவந்துள்ளார். சிபின் பணத்தைத்  தராததால், அவர்  வளர்த்து வந்த  ‘விலை உயர்ந்த பக்’   ரக நாய்க்குட்டியை சிபினுக்குத் தெரியாமல், சபரீஸன் தனது வீட்டுக்கு  எடுத்துச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. காணாமல் போன  தனது நாய்க்குட்டியை  பல  நாட்களாகத் தேடிவந்துள்ளார், சிபின்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி  சபரீஸ் வீட்டுக்கு அருகில் வசிக்கும்  தனது நண்பரான  அனுப்பை பார்க்கச்  சென்றுள்ளார்,  சிபின். அப்போது,  சபரீஸ் வீட்டில்  தனது நாய்க்குட்டி கட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். தான் ஆசையாக வளர்த்த  நாய்க்குட்டியை சபரீஸ் திருடிச் சென்றுவிட்டதை நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் சபரீஸ் வீட்டுக்குச் சென்ற  சிபின்,  தனது நாயைத் தந்துவிடுமாறு   கேட்டுள்ளார். இதில்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி தகராறாக மாறியுள்ளது. இதில்,  சபரீஸுக்கு ஆதரவாக அருண் , கார்த்திக்,  பார் நாகராஜ், மாரிமுத்து, வசந்த், சபரீஸ்வரன், சுலைமான், அய்யனார் ஆகியோரும், சிபினுக்கு ஆதரவாக  அனுப், சந்தோஷ் விக்ரம்,நவ்சாத், ராகவேந்திரா,  கனகராஜ் ஆகியோரும் சேர்ந்துகொள்ள,  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான  ஜோதி நகரில் இருதரப்பு வாலிபர்களும்  அடிதடி ரகளையில்  ஈடுபட்டனர்.  இந்த மோதலில்,  சிபின் தரப்பினர் சபரீஸ் தரப்பினரின் இருசக்கர வாகனங்களையும்  சபரீஸ் தரப்பினர் சிபின் தரப்பினரின் இருசக்கர வாகனங்களையும்  உடைத்தனர்.  

இந்த விவகாரத்தில், சிபின் கொடுத்த புகாரின் பேரில், பார் நாகராஜ் உள்ளிட்ட 8 பேர்மீது பொதுமக்களின் சொத்துக்கு  சேதம் விளைவித்தாகவும், சபரீஸ் கொடுத்த புகாரின் பேரில் சிபின்  உள்ளிட்ட 6 பேரின்மீது காயம் ஏற்படுமாறு  தாக்கியதாகவும் வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், 14 பேரையும்  கைதுசெய்து பொள்ளாச்சி ஜே.எம் 1 நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்பிருப்பதாகப் பலராலும் சந்தேகிக்கப்படும்  பார் நாகராஜ் இப்படி ஒரு அடிதடி வழக்கில் சிக்கி கைதுசெய்யப்பட்டிருப்பது பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க