`விஷத்துக்கு எதிராக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்!' - மோடியைச் சாடிய ராகுல் காந்தி | Rahul Gandhi slams Modi in Wayanad

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:17:30 (08/06/2019)

`விஷத்துக்கு எதிராக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்!' - மோடியைச் சாடிய ராகுல் காந்தி

`மோடி, விஷத்தைப் பயன்படுத்துகிறார். நாங்கள் விஷத்துக்கு எதிராக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்' என்று வயநாட்டில் ராகுல் காந்தி பேசினார்.

ராகுல்காந்தி வயநாடு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவருகிறார். இரண்டாவது நாளாக இன்று காலை வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ராகுல், அங்கு எம்.பி-க்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பிறகு, கல்பெட்டா, மானந்தவாடி, புல்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் பேரணியாக வந்து, மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பொதுமக்களுக்கு கைகொடுப்பது, சிறுவர் சிறுமிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்வது, முதியோரிடம் ஆசீர்வாதம் வாங்குவது என்று  பிஸியாக சுற்றிக்கொண்டிருந்தார்.  

ராகுல்காந்தி வயநாடு

பொதுமக்களிடம் பேசிய ராகுல் காந்தி, ``வயநாடு மக்களின் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க, காங்கிரஸின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்" என்பதை மீண்டும் மீண்டும் கூறினார். அதேநேரத்தில், மோடியையும் சற்று அதிகமாகவே விமர்சித்தார். "தேசிய அளவில் விஷத்துக்கு எதிராக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். மோடி, விஷத்தைப் பயன்படுத்திவருகிறார்.மோடி பணபலம், அதிகாரபலம் இருக்கிறது. ஆனால் அவரிடம் முக்கியமான ஒன்று இல்லை. அது தான் அன்பு.

ராகுல்காந்தி வயநாடு

நான் வலுவான வார்த்தைகளைப்  பயன்படுத்துகிறேன். ஆனால், மோடி விஷத்தைப் பயன்படுத்தி, வெறுப்பு அரசியலைச் செய்து, நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்திவருகிறார். தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பொய் மூட்டைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்" என்று ஆவேசமாகப் பேசினார்.