ராஜன் செல்லப்பா சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளிக்க மறுப்பு! | Minister Kadambur Raju refused to speak about the controversial speech of Rajan Chellappa

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/06/2019)

கடைசி தொடர்பு:19:00 (08/06/2019)

ராஜன் செல்லப்பா சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளிக்க மறுப்பு!

மதுரை வடக்குத் தொகுதியின் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான ராஜன் செல்லப்பா, கட்சித் தலைமைகுறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாகப் பதிலளிக்க, அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுத்துவிட்டார். 

கடம்பூர் ராஜூ

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ’’நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். அதில், மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையிலேயே இறுதிமுடிவு எடுக்கப்படும் . 

நெல்லையில் குற்றாலம் சீஸன் மற்றும் நெல்லையப்பர் கோயில் தேர்த்திருவிழா ஆகியவற்றை மையாக வைத்து, ஒவ்வொரு வருடமும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி, வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. 

இந்தியாவிலேயே, பிரதமரை அதிகமாக தரம்தாழ்ந்து விமர்சித்தவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது கட்சியைச் சேர்ந்த 37 எம்.பி-க்கள் மூலம் தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவர முடியாது. ஸ்டாலினின் ஒரே குறிக்கோள், முதல்வர் ஆவதுதான். ஆனால் அது நடக்காது. தமிழகத்தில் குதிரைபேரம் மூலம் ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கான வாய்ப்பு கிடையாது. 

கடம்பூர் ராஜூ

மத்தியில் நடக்கும் பாரதிய ஜனதா ஆட்சியில், தமிழர்களின் உரிமைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. பா.ஜ ஆட்சியில்தான் தமிழகத்தின் தீர்க்க முடியாத பிரச்னைகள் பலவும் தீர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பா.ஜ ஆட்சிக் காலத்திலேயே தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தக் கட்சியுடன் அ.தி.மு.க-வுக்கு சுமுகமான உறவு உள்ளது. 

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு. ஆனால்,  உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே நீட் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. தென்மேற்குப் பருவமழை தாமதமானாலும்  குடிநீர்ப் பிரச்னை ஏற்படலாம் சரிப்படுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஏழுபேர் விடுதலைகுறித்த விவகாரம், ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது. இதற்காக, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும்’’ என்று தெரிவித்தார்.