மத்திய அரசு அலுவலகப் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிப்பு! - திருச்சியில் பரபரப்பு | Hindi words in blacked in Trichy central government offices

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (08/06/2019)

கடைசி தொடர்பு:17:37 (08/06/2019)

மத்திய அரசு அலுவலகப் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிப்பு! - திருச்சியில் பரபரப்பு

திருச்சியின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் இருந்த இந்தி எழுத்துகளை  அழித்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்தி எழுத்துகள் அழிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு  மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கை வெளியானதிலிருந்து இந்தி எதிர்ப்பு குறித்த பிரசாரம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு,  `இந்தி விருப்ப மொழியாக இருக்குமே தவிர, கட்டாயமாகத் திணிக்க மாட்டோம்' என அறிவித்துள்ளது.
 
இந்தி எழுத்துகள் அழிப்பு
 
இந்நிலையில், திருச்சி விமான நிலையம், தலைமை தபால் நிலையம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் முன்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் இருந்த  இந்தி எழுத்துகளை, மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு கறுப்பு மை கொண்டு அளித்துள்ளனர். அந்தப் பலகையில் இருந்த ஆங்கில எழுத்துக்களை அழிக்காமல் விட்டுவிட்டனர்.
இதுகுறித்த தகவல்கள் வெளியானதிலிருந்து திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்தி எழுத்துகளை அளித்தவர்கள் குறித்து திருச்சி மாநகரம், திருச்சி விமான நிலையம் மற்றும் கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் இருந்த இந்தி எழுத்துகள் கறுப்பு மை மற்றும் தாரைப் பூசி மறைத்த சம்பவம், திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.