`அ.தி.மு.க-வில் இருக்கும் அனைவரும் தலைவர்கள்தான்!' - எடப்பாடி பழனிசாமி | All are leaders in ADMK, says CM EPS

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:18:30 (08/06/2019)

`அ.தி.மு.க-வில் இருக்கும் அனைவரும் தலைவர்கள்தான்!' - எடப்பாடி பழனிசாமி

முதல்வர்

 ஆவணிபேரூர் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலம், எடப்பாடி சார்நிலைக் கருவூல அலுவலகக் கட்டம் மற்றும் முடிவுற்ற திட்டத்தைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சி, எடப்பாடியில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ''உள்ளாட்சித் தேர்தல் வருவதால் அவசர அவசரமாகப் பாலங்களை திறப்பதாக தி.மு.க-வினர் குற்றச்சாட்டு வைக்கிறார்களே...'' என்றதற்கு, ''பாலம் திறக்காமல் வைத்திருந்தால் முதல்வருக்காக பாலம் திறக்காமல் வைத்திருக்கிறார்கள் என்று நீங்கள் எழுதுகிறீர்கள். மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்தால், அவசரமாகத் திறக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். சேலம் 5 ரோடு பகுதி எவ்வளவு போக்குவரத்து நெரிசலான பகுதி என்று உங்களுக்கே தெரியும். நெரிசலைத் தவிர்க்கவே பாலம் திறந்தோம். தி.மு.க-வினர் இப்படிப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறாமல் மக்கள் பணி செய்ய வேண்டும் என்றார்.

அதேபோல, தேவையில்லாத இடங்களில் பாலம் கட்டியிருப்பதாக எம்.பி பார்த்திபன் கூறியிருக்கிறார். எந்த இடத்தில் தேவையில்லாமல் பாலம் கட்டியிருக்கிறோம் என்று கூற முடியுமா? போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் மக்கள் கோரிக்கையின் அடிப்படையிலேயே பாலம் கட்டப்படுகிறது. பாலம் கட்டுவதற்கு கால தாமதம் ஆவதாகவும் தி.மு.க-வினர் கூறியிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில், சேலம் ஆனந்தா பாலத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு, நிலம்கூட கையகப்படுத்தாமல் வைத்திருந்தார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தி, பாலம் கட்டி முடித்தோம்.

மீட்டிங்

 எட்டு வழி பசுமைச் சாலையை விரைவுச் சாலையாக மாற்றியிருக்கிறார்கள். நாங்கள் 40 சதவிகித கமிஷனுக்காகப் போடுவதாக தி.மு.க எம்.பி கூறியிருக்கிறார். இந்தச் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் போடுகிறது. அதற்கு மாநில அரசு நிலம் கொடுத்து உதவுகிறது. இப்படி பொய்யான தகவல்களைச் சொல்லி கொச்சைப்படுத்துகிறார். சேலத்தில் பல அரசு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எந்த விழாவிற்கும் அழைப்பிதழ் அடிப்பதில்லை. போனில் தகவல் சொல்லுவார்கள். ஆனால், அ.தி.மு.க-வினருக்கு அழைப்பிதழ் கொடுத்ததாகவும், தி.மு.க-வினருக்கு கொடுக்கவில்லை என்றும் பச்சைப் பொய் பேசுகிறார்'' என்றவரிடம்,

மதுரையில் ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று பேட்டி கொடுத்திருக்கிறாரே?' என்றதற்கு, ``அவருடைய பேட்டியை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. பத்திரிகையாளர்கள் பரபரப்பிற்காக நான் பதில் கூற முடியாது. அ.தி.மு.க, தொண்டர்கள் கட்சி. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் அனைவரும் தலைவர்கள். உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் சந்திக்கத் தயார். அ.தி.மு.க வலிமையான கட்சி'' என்றார்.