`ரயில் பயணத்தில் மசாஜ்...!' - அசத்தும் இந்தியன் ரயில்வே | indian railway introduces massage service in running train

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:19:30 (08/06/2019)

`ரயில் பயணத்தில் மசாஜ்...!' - அசத்தும் இந்தியன் ரயில்வே

மசாஜ் சேவைக்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மற்ற ரயில்வே மண்டலங்களிலும் சேவையை விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவெடுத்துள்ளது.

"உங்கள் பயணம் இனிதாகுக..." என்ற ரயில்வே அறிவிப்பு, இனி இனிதாகத்தான் போகிறது. ரயில் பயணத்தில் மசாஜ் சேவையை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. 

இந்தியன் ரயில்வே

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில், முதற்கட்டமாக இந்த மசாஜ் சேவை தொடங்கப்பட உள்ளது. ரயில் பயணத்தின்போது, பயணிகளுக்கு தலை மற்றும் பாதங்களுக்கு மட்டும் மசாஜ் செய்யப்படும். இதற்காக, ஒவ்வொரு ரயிலிலும் 5 மசாஜ் சேவகர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐ.டி கார்டுகளும் வழங்கப்பட உள்ளன.

மசாஜ்

கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகைகளில் செய்யப்படும் இம்மசாஜ்களுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மசாஜும் 10 நிமிடங்கள் செய்யப்பட உள்ளன. டிக்கெட் வருமானத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக வருமானத்தை எப்படிப் பெருக்கலாம் என ஆலோசனை வழங்குமாறு ஒவ்வொரு ரயில்வே டிவிஷன்களுக்கும் ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி, மேற்கு ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த ரத்லம் டிவிஷன் அதிகாரிகள், இந்த மசாஜ் சேவை ஐடியாவை வழங்கியுள்ளனர். 

மசாஜ்

ரயில்வே உயரதிகாரிகளுக்கும் மசாஜ் ஐடியா பிரமாதமாகத் தெரிய, உடனடியாக இந்தோரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இச்சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தோர் - புதுடெல்லி, இந்தோர் - அமிர்தசரஸ், இந்தோர் - டேராடூன் போன்ற ரயில்களில் மசாஜ் சேவை இன்னும் 10-15 நாள்களில் அறிமுகம் ஆகவுள்ளது. இதன் மூலமாக ஆண்டுதோறும் 20 லட்ச ரூபாய் கூடுதல் வருமானமும் பயணிகளின் எண்ணிக்கை 90 லட்சமாகவும் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மற்ற ரயில்வே மண்டலங்களிலும் சேவையை விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவெடுத்துள்ளது.