``சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அ.தி.மு.க-வில் இடமில்லை!” - திண்டுக்கல் சீனிவாசன் உறுதி | There is no place for Sasikala and Dinakaran in aiadmk party says minister

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (08/06/2019)

கடைசி தொடர்பு:10:44 (09/06/2019)

``சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அ.தி.மு.க-வில் இடமில்லை!” - திண்டுக்கல் சீனிவாசன் உறுதி

``சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கோ, அ.ம.மு.க-வின் டி.டி.வி தினகரனுக்கோ அ.தி.மு.க கட்சியில் இடமே இல்லை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை" என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதுக்கோட்டையில் பேசினார். 

திண்டுக்கல் சீனிவாசன்

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே யூகலிப்டஸ் மரக்கன்று உற்பத்தி செய்யும் இடம் உள்ளது. இதை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,  ``இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? அ.தி.மு.க-வில் உள்ள இரட்டைத் தலைமையை ஒற்றைத் தலைமையாக மாற்ற வேண்டும் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை ராஜன் செல்லப்பா கூறி இருப்பது தவறான ஒன்றாகும். அவரின் கருத்து குறித்து வேறு எந்தப் பதிலும் நான் கூற விரும்பவில்லை. அ.தி.மு.க-வில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது, இரட்டைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க சிறப்பாகவே செயல்படுகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். அவர் வெளியே வருவதால், எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ அ.தி.மு.க-வில் இடம் கிடையாது. இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்வோம்.

அமைச்சர்

வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் போதுமான தண்ணீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பவும், சோலார் மின் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் பின்பற்றப்படும் தொழில் நுட்பங்கள் இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். யூகலிப்டஸ் மரங்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. ஆனால், இதுதொடர்பாக ஐ.எப்.எஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்.

ஒரு வேலை பாதிப்பு ஏற்பட்டால், அனைத்தும் அகற்றப்படும். யூகலிப்டஸ் மரங்களை உடனே அழிக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் உடனே பிறப்பிக்க முடியாது. மேலும், வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனங்களைத் தீ விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் பின்பற்றப்படும் தொழில் நுட்பங்கள் இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது" என்றார்.