``வருஷம் திரும்பட்டும் பார்த்துக்கொள்ளலாம்!” - உதயநிதிக்கு கட்சி பொறுப்பு வழங்குவதில் தாமதம் | reasons behind delay for udhayanidhi stalin elevation to top post

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (08/06/2019)

கடைசி தொடர்பு:10:51 (09/06/2019)

``வருஷம் திரும்பட்டும் பார்த்துக்கொள்ளலாம்!” - உதயநிதிக்கு கட்சி பொறுப்பு வழங்குவதில் தாமதம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு, இம்மாதம் இளைஞரணி பதவி கொடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஜாதகக் காரணங்களால் பட்டாபிஷேகம் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் சிலர், ``நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகத் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 7200 கி.மீ. பயணம் செய்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இளைஞர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தேர்தல் முடிந்தவுடன், வெள்ளக்கோயில் சாமிநாதனிடம் இருக்கும் இளைஞரணிச் செயலாளர் பதவியை, உதயநிதிக்கு அளிக்க வேண்டுமென மாவட்டம்தோறும் கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டு தலைமைக்குக் கடிதம் எழுதினர். இதற்கான ஒருங்கிணைப்பு பணியை, உதயநிதியின் நண்பரும், திருவெறும்பூர் எம்.எல்.ஏ-வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்கொண்டிருந்தார். 

 "வருஷம் திரும்பட்டும்..  தள்ளிப் போன இளைஞரணி பதவி!"

`கட்சிக்குள் உதயநிதி அடியெடுத்து வைத்து சிலகாலமே ஆகியிருப்பதால், அதற்குள் இளைஞர் அணிச் செயலாளர் பதவி அளிப்பது நன்றாக இருக்காது. குடும்ப அரசியல் என முத்திரை குத்தப்படும்.' என சில சீனியர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் சென்றிருந்தபோது, மகன் உதயநிதியையும் உடன் அழைத்துச் சென்றார். அவருக்கு இளைஞரணி தலைமைப் பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என கட்சிக்குள் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், பதவியேற்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 "வருஷம் திரும்பட்டும்..  தள்ளிப் போன இளைஞரணி பதவி!"

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்து ஓராண்டு நிறைவடையவில்லை என்பதாலும், ஜாதக ரீதியாக உதயநிதி இப்போது பதவியேற்பது இறங்குமுகத்தை உருவாக்கும் என்று ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாலும் பதவியேற்பு சில மாதங்கள் தள்ளிப் போயுள்ளது. ஜோதிடர்கள் கைகாட்டிய தென் திசையில் இருந்துதான், மார்ச் 21-ம் தேதி தென்சென்னை தொகுதியில் தனது பிரசாரப் பயணத்தை உதயநிதி தொடங்கினார். ``தலைவர் இறந்து ஓராண்டுகூட ஆகவில்லை என்பதால், சுபநிகழ்ச்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். வருஷம் திரும்பட்டும் பார்த்துக்கலாம்." என சில மூத்த குடும்ப உறுப்பினர்களும் ஆலோசனை வழங்கியிருப்பதால், பட்டாபிஷேகம் தள்ளிப்போயுள்ளது" என்றனர்.  

 "வருஷம் திரும்பட்டும்..  தள்ளிப் போன இளைஞரணி பதவி!"

இதுகுறித்து நம்மிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் தரப்பினர், ``உதயநிதிக்கு கட்சிப் பதவி அளிக்கப்படும் எனத் தலைமை எங்குமே அறிவிக்கவில்லை. சில ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளுக்காக, தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். ஜாதக, ஜோதிடத்தை நம்பி கட்சி நடத்தும் நிலையில் தி.மு.க இல்லை. உதயநிதியின் உழைப்புக்கு என்ன வெகுமதி, எப்போது அளிக்க வேண்டுமெனக் கட்சியின் உயர்மட்டக் குழு முடிவெடுக்கும்" என்றனர்.