`நேர்மைக்கு கிடைத்த வெகுமதி’ - 2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்! | Erode school boy name and photo placed in 2nd standard text book

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (09/06/2019)

கடைசி தொடர்பு:19:21 (11/06/2019)

`நேர்மைக்கு கிடைத்த வெகுமதி’ - 2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்!

ஈரோட்டில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 50,000 ரூபாயை ஈரோடு எஸ்.பியிடம் ஒப்படைத்த சிறுவனின் நேர்மையைப் பாராட்டும் வகையில், இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றிய செய்தி படத்தோடு இடம் பெற்றிருக்கிறது.

சிறுவன்

ஈரோடு கனிராவுத்தர்குளம் சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா - அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின்.  இவர் ஈரோடு சின்ன சேமூர் அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு ஜூலை மாதம், இடைவேளையின்போது பள்ளி மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் முகமது யாசின், பள்ளியை ஒட்டிச்செல்லும் சாலையில் பை ஒன்றில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதைக் கண்டெடுத்திருக்கிறார். உடனடியாக அந்தப் பணத்தை வகுப்பாசிரியரிடம் கொடுக்க, அதில் 50,000 ரூபாய் பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது.

மாணவன்

சிறுவனின் நேர்மையைக் கண்டு வியந்துபோன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக அழைத்துச் சென்று அவர் கையாலேயே, அந்தப் பணத்தை ஈரோடு எஸ்.பி-யிடம் ஒப்படைத்தனர். சிறுவனின் நேர்மையைப் பாராட்டி பரிசு கொடுத்து, ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் அனுப்பி வைத்தார். இந்தச் செய்தி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வைரலானது. இந்தச் செய்தியையறிந்த நடிகர் ரஜினிகாந்த்,  சிறுவன் முகமது யாசினை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரவழைத்து தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டி, ‘யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன்’ என்று கூறினார்.

பள்ளி

இந்த நிலையில், முகமது யாசினின் நேர்மையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 2-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் சிறுவன் யாசினைப் பற்றிய செய்தி இடம் பிடித்திருக்கிறது. மாணவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், `ஆத்திசூடி நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசினை, ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் பாராட்டியது புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முகமது யாசினின் தாயார் அப்ரோஸ் பேகத்திடம் பேசினோம். ``என் பையனைப் பற்றி புத்தகத்துல வந்துருக்குன்னு சொன்னாங்க. அதைப் பார்த்த உடனேயே எங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். என் மகனோட நேர்மையை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்திய ஆசிரியர்கள், போலீஸார் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ரொம்ப நன்றி. மனசுக்கு ரொம்ப நெகிழ்வா இருக்கு. நாங்க பசங்களுக்குன்னு எதுவும் சேர்த்து வைக்கலைன்னாலும், எல்லாரும் அவனுக்கு பெரிய சப்போர்ட்டா இருக்கிறது சந்தோஷமா இருக்கு” என்றார்.

வாழ்த்துகள் யாசின்!