`குடும்பத்துக்காகக் கழகத்தை வளைக்க நினைப்பது வேதனை!' - அ.தி.மு.க எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன் | we need single administration says ramachandran

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (09/06/2019)

கடைசி தொடர்பு:12:00 (09/06/2019)

`குடும்பத்துக்காகக் கழகத்தை வளைக்க நினைப்பது வேதனை!' - அ.தி.மு.க எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன்

அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் பேசி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கட்சி எம்.எல்.ஏ

`அ.தி.மு.கவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும்’ என்ற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது. இந்தக் கருத்துக்கு விதையிட்டவர் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா. ``அ.தி.மு.க-வில் தற்போதுள்ள இரட்டைத் தலைமையால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒரே தலைமை தேவை. கட்சியையும், ஆட்சியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும். இரட்டை தலைமையால் உடனே முடிவெடுக்கமுடியவில்லை’ என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு ஆதரவும் ஒருபுறம் பெருகி வருகிறது.

இரு தலைமை

ராஜன் செல்லப்பா கூற்றுக்கு, முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி ஆதரவு தெரிவித்தார். குன்னம் எம்.எல்.ஏ-வும் வரவேற்றுப் பேசியுள்ளார்.  அ.தி.மு.க-வின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``அ.தி.மு.க-வின் ஒற்றைத்தலைமை குறித்து மதுரை மாவட்டச்செயலாளர் ராஜன் செல்லப்பா கூறிய கருத்தில் நான் உடன்படுகின்றேன். அவர் சொன்னதுபோல ஒற்றைத்தலைமையும், வலிமையான தலைமையும், சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்.

எம்.ஜி.ஆராகட்டும். ஜெயலலிதாவாகட்டும், தன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கழகமே குடும்பமென வாழ்ந்து மறைந்த  தலைவர்கள் உருவாக்கி, காத்திட்ட அ.தி.மு.கவை யார் தன் குடும்பத்துக்காக பிளவுபடுத்த எண்ணினாலும் சரி அவர்களை இன்னொரு சசிகலாவாக்கத்தான்  தொண்டர்கள் கருதுவார்கள். இதை தலைவர்கள் புரிந்துகொண்டு, கழகத்துக்காக தன்னை அர்ப்பணித்து வாழவேண்டுமே தவிர, தன் குடும்பத்துக்காக கழகத்தை வளைக்க நினைப்பது எங்களைப்போன்ற தொண்டர்களுக்கு வேதனையாக உள்ளது” என்று பேசியுள்ளார்.