'அரசுப் பள்ளியில் ஆங்கில வழி சேர்க்கைக்கு கட்டணக் கொள்ளை!' -கேள்விக்குறியாகும் ஏழை மாணவர்களின் கல்வி ! | govt girls school illegally collects fee from parents for admission

வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (10/06/2019)

கடைசி தொடர்பு:12:49 (10/06/2019)

'அரசுப் பள்ளியில் ஆங்கில வழி சேர்க்கைக்கு கட்டணக் கொள்ளை!' -கேள்விக்குறியாகும் ஏழை மாணவர்களின் கல்வி !

'அரசுப் பள்ளியில் ஆங்கில வழி சேர்க்கைக்கு கட்டணக் கொள்ளை!' -கேள்விக்குறியாகும் ஏழை மாணவர்களின் கல்வி !

``எப்படியாவது அடுத்த தலைமுறையாவது பள்ளிக்கூடம் போகணும்!” என்று ஏங்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள எத்தனையோ பெற்றோருக்கான ஒரே ஆறுதல் அரசுப் பள்ளிகளே! அரசுப் பள்ளிகள் எல்லாம் சுமார் ரகம்தான் என்கிற பிம்பத்தை உடைத்து, தனியார் பள்ளிகளைப் பின்னுக்குத் தள்ளி சமீபகாலமாக அரசுப் பள்ளிகள் முன்னேறி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கைக்காகக் கட்டணம் வசூலித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோடை விடுமுறை முடிந்ததை அடுத்து, ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு 2019 -2020 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. சேர்க்கைக்காக கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரம்பேசி கட்டணம் வசூலிக்கப்படுவதாவும், ஆனால் அதற்கு எந்தவிதமான ரசீதும் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் வந்தது.

ஊத்தங்கரை பள்ளி

`அரசுப் பள்ளியில் எந்தக் கல்விக் கட்டணமும் வாங்கக் கூடாது தானே?’ என்று பெற்றோர்கள் கேட்டதற்கு `தனியார் பள்ளியில் காசுகட்டிப் படிக்க வைக்கிறிங்க! இங்க நாங்க குறைந்த தொகையைத்தானே கேக்குறோம்!' என்று வெகு இயல்பாகக் கூறியுள்ளனர் சிலர். வேறுவழியில்லை என்பதால் சிலர் கேட்ட பணத்தை செலுத்தியிருக்கின்றனர். பணம் இல்லாதவர்கள் தலைமை ஆசிரியரிடம் பேசி தொகையைக் குறைத்துச் செலுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தரப்பு கூறுகையில், ``நான் தினக்கூலி வேலை செய்கிறேன். அதனால் என் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியவில்லை. சிலருக்குத் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிக்கவைக்க முடிவதில்லை. பணம் இல்லை என்பதால்தான், அரசுப் பள்ளிகளில் எங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறோம். ஆனால், இந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர், சேர்க்கைப் படிவத்துக்கு 50 ரூபாய், சேர்க்கைக்கு வகுப்புகளுக்கு ஏற்றவாறு ஆயிரக்கணக்கில் பணம் கேட்கிறார். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என எங்கள் வறுமை நிலையை எடுத்துக்கூறிப் பார்த்தோம். அதற்கு அவர்கள் `ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும், பள்ளி பராமரிப்புக்கும்தான் கேக்குறோம்’ என்கின்றனர். வேற வழியில்லை என்பதால் சிலர் கேட்ட பணத்தைக் கட்டியுள்ளனர். பணம் இல்லாத எங்களைப் போன்ற சிலர், தலைமை ஆசிரியரிடம் பேசி இவ்வளவுதான் உள்ளது எனக் கூறினாலும் `இன்னும் ஆயிரம் கொடு, ஐந்நூறு கொடு' எனக் கேட்கின்றனர். கடைசியில் எப்படியும் ஒரு தொகையை வாங்கிவிடுகின்றனர். அதற்கு எந்தவித ரசீதும் கொடுப்பதில்லை. ரசீது கேட்டதற்கு, `ரசீது எல்லாம் தேவை இல்லை. உங்கள் பிள்ளைகளை நேரடியாக வகுப்புகளில் விட்டுவிடுங்கள்' என்று கூறுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் சிபாரிசுகளோடு வருகின்ற மாணவர்களுக்கு மட்டும் சலுகையளிக்கும் விதமாகக் குறைவான பணத்துக்குப் பேரம். தனியார் பள்ளிகள் போலவே நடந்துகொள்கின்றனர்” என்கின்றனர். 

தலைமை ஆசிரியர்பாதிக்கப்பட்ட மற்றொரு பெற்றோர், ``என்னோட அரை மாத சம்பளத்தைக் கட்டணமாச் செலுத்தியிருக்கேன். எப்படி இந்த மாதத்தைக் கழிக்கப் போகிறோம் என்று தெரியல, எங்ககிட்ட பணம் வாங்கித்தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்களா, அப்போ அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லையா?”என பல கேள்வியை எழுப்புகிறார். 

பணம் வாங்கியதாகக்  குற்றம் சாட்டப்படும் தலைமை ஆசிரியர் பரிமளத்திடம் பேசினோம். அவர், ``அந்த தகவல்கள் அனைத்தும் பொய். நாங்கள் எந்தப் பணத்தையும் கேட்கவும் இல்லை. மற்ற பள்ளிகளைக் காட்டிலும் அதிகமான தேர்ச்சி சதவிகிதத்தைக் கொடுக்கிறோம். அதன் காரணமாக சிலர், பொறாமையினால் உங்களிடம் தவறான தகவலை அளித்துள்ளனர். நீங்க யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்கள். நான் காசு வாங்கியிருக்கேன்னு எப்படிச் சொல்றீங்க? .பெற்றோர், ஆசிரியர் சங்கத்தின் மூலம் வாங்க முடிவு செய்திருக்கிறோம்" என்று முரணாகப் பதில் அளித்தார்.

``ஆறாம் வகுப்பு படிக்கும் பிள்ளையின் பெற்றோரிடம் ரூ.2,500 வாங்கியதாகப் புகார் வந்திருக்கிறதே" என அவரிடம் கேட்டதற்கு, ``ரூ.2,500 எல்லாம் வாங்கவில்லை. வெறும் 500 ரூபாய்தான் வாங்கினோம்” என்று பதிலளித்தார். 

இந்தப் புகாரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம் எடுத்துச் சென்றோம். ``பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை எங்களிடம் புகார் அளிக்கச் சொல்லுங்கள். `500 ரூபாய்தான் வாங்கினோம்' என்று ஆசிரியர் சொன்னாலும் அதுகூட எதற்கு வாங்க வேண்டும்? அதுவும்  குற்றம்தான். குற்றம் சுமத்தப்பட்டுள்ள தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், ஏழை மக்களிடம் வசூலித்த கட்டணத்தொகையை திரும்பப் பெற்று கொடுக்க வேண்டும் என்பது ஏழை மக்களின் கோரிக்கையாக உள்ளது.மாவட்ட கல்வி அலுவலர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் ?


டிரெண்டிங் @ விகடன்