`பா.ம.க மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது!' - ராமதாஸ் | Ramadoss statement regarding ilavarasan death

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/06/2019)

கடைசி தொடர்பு:13:00 (09/06/2019)

`பா.ம.க மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது!' - ராமதாஸ்

``தர்மபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை; மதுபோதையில் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இறப்பதற்கு முன் அவர் மது அருந்தியிருந்தார். மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற போதைப்பொருள் மட்டும்தான் அவரது உள் உறுப்புகளில் காணப்பட்டதாகவும், விஷத்தன்மையுடைய வேறு பொருள்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

ராமதாஸ்

தர்மபுரியை அடுத்த நாயக்கன்கொட்டாய் சேர்ந்த  இளைஞர் இளவரசனும், அதே பகுதியைச் சேர்ந்த திவ்யாவும், கலப்புத்திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னர் இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. சில நாள்களுக்குப்பிறகு, இளவரசனின் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``தர்மபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் கூறியிருக்கிறது. இளவரசனின் மரணத்தில் அரசியல் லாபம் தேடத் துடித்த தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மனசாட்சியை மரணிக்கச் செய்துவிட்டு, இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதிவிசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்தனர்.

இளவரசன் திவ்யா

அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம்தான் விரிவான விசாரணைக்குப் பிறகு தர்மபுரி இளவரசன் கொலை செய்யப்படவில்லை; மதுபோதையில் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இறப்பதற்கு முன் அவர் மது அருந்தியிருந்தார். மதுவில் உள்ள எத்தில் ஆல்கஹால் என்ற போதைப்பொருள் மட்டும்தான் அவரது உள் உறுப்புகளில் காணப்பட்டதாகவும், விஷத்தன்மையுடைய வேறு பொருள்கள் எதுவும் அவரது உடலில் இல்லை என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி சிங்காரவேலு, இது சந்தேகத்திற்கிடமின்றி தற்கொலைதான் என்று கூறியுள்ளார். இளவரசனுக்கு நீண்டநாள்களாகவே தற்கொலை சிந்தனை இருந்திருக்கிறது.

ஏற்கெனவே சென்னையில் ஒருமுறை தமது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதையும் நீதிபதி அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். நீதியரசர் சிங்காரவேலு அறிக்கை மூலம் பா.ம.க மீது சுமத்தப்பட்ட பெரும்பழி துடைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் கொல்லப்படவில்லை; தற்கொலைதான் செய்துகொண்டார் என நீதியரசர் சிங்காரவேலு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் பா.ம.க மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள் அனைவரும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.