`இந்தி பண்டிட் வீட்டில் தி.மு.க எம்.பி-க்கள்!' - பொன்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்த அனுபவம் | Former union minister pon.radhakrishan speaks about hindi issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (09/06/2019)

கடைசி தொடர்பு:14:32 (09/06/2019)

`இந்தி பண்டிட் வீட்டில் தி.மு.க எம்.பி-க்கள்!' - பொன்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்த அனுபவம்

 

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், இந்தி பேசாத மாநிலங்களில் 6-ம் வகுப்பிலிருந்து இந்தி கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தமிழ்த் தேசிய இயக்கங்களும், தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்ததால் இந்தி கட்டாயம் என்பது நீக்கப்பட்டது. ஆனாலும் மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்ற அம்சம் நீடிப்பதால், இந்தி திணிப்பு முழுமையாக நீங்கவில்லை என்ற ஆதங்கக் குரல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் ``தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களும் அவர்களின் குழந்தைகளும் இந்தி படித்து பயன் அடைகிறார்கள். ஆனால், இங்குள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தி படிப்பதை தி.மு.க-வினர் எதிர்க்கிறார்கள்'' என பா.ஜ,க.-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டுகிறார். இது தொடர்பாக பழைய சம்பவம் ஒன்றையும் நினைவு கூர்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அவர், ``தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளால் தமிழ் எந்தளவுக்கு வளர்க்கப்பட்டது. தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் வளர்வதற்கு, தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தெடுக்கவும் இவர்கள் என்ன ஊக்கம் கொடுத்தார்கள். தங்களுக்கு பேர், புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்கள்; அவ்வளவுதான். கிராமப்புறங்களில்கூட, அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில் ஆச்சடிக்கப்படுகிறது.

தமிழ் நமது உயிருக்கு சமம். அதேசமயம் உலகம் சுருங்கிக்கொண்டே வருகிறது. இங்குள்ள ஏழை மாணவர்கள், படித்து முடித்துவிட்டு வெளிமாநிலங்களில் பணிபுரிய வேண்டிய சூழல் இருக்கும்நிலையில், இவர்கள் ஏன் இந்தியை இலவசமாக கற்றுக்கொள்ளக் கூடாது. இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள். இந்தியை எதிர்க்கும் தி.மு.க-வினர் ரகசியமாக இந்தி கற்றுக்கொள்கிறார்கள். காசியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் விஸ்வநாதன் என்பவர், டெல்லியில் இந்தி டியூசன் எடுக்கிறார். நான் அவரிடம் இந்தி கற்றுக்கொள்ள சென்றிருந்தேன். அங்கு தி.மு.க-வைச் சேர்ந்த பிரபலமான எம்.பி-க்களும் வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் தலைகுனிந்து நின்றார்கள். நாகரிகம் கருதி அவர்களது பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை” எனக் காட்டமாக தெரிவித்தார்.