`அந்த நாள் நியாபகம்' - செவிலியர் ராஜம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகுல்காந்தி! | Rahulgandhi meets Nurse Rajamma

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (09/06/2019)

கடைசி தொடர்பு:14:35 (09/06/2019)

`அந்த நாள் நியாபகம்' - செவிலியர் ராஜம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராகுல்காந்தி!

தன்னை முதன்முதலாக தொட்டுத் தூக்கிய ராஜம்மா என்ற செவிலயரை சந்தித்து, ராகுல்காந்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வயநாட்டில்  மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். தன் தந்தையின் அஸ்தியைக் கரைத்த பகுதி, முதன்முதலில் தொட்டு தூக்கிய செவிலியர்களில் ஒருவரான ராஜம்மா இருக்கும் பகுதி என்று வயநாடு தொகுதி ராகுல்காந்திக்கு மிகவும் ஸ்பெஷல். அதிலும், ராகுல்காந்தி இந்தியரே அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்தவந்த நிலையில், `ராகுல்காந்தி இந்தியாவில்தான் பிறந்தார். சோனியா காந்திக்குப் பிரசவம் பார்த்த செவிலியர்களில் நானும் ஒருவர். அப்போது ராகுல் மிகவும் அழகாக இருப்பார். ராகுல்காந்தியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது ' என்று கூறியிருந்தார் ராஜம்மா.

ராஜம்மா

சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த ராஜம்மா, செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில், திடீர் சர்ப்ரைஸாக ராகுல்காந்தி ராஜம்மாவை சந்தித்தார். ராஜம்மாவை கட்டியணைத்து, தனது அன்பை வெளிப்படுத்தினார் ராகுல். அப்போது, பிரசவத்தின்போது நடந்த விஷயங்களை ராஜம்மா நினைவுபடுத்த, ராகுல் நெகிழ்ந்துவிட்டாராம். ராகுலுக்கு, கேரளா ஸ்பெஷல் பலாப்பழம் சிப்சை வழங்கினார் ராஜம்மா.அதேபோல, கோழிக்கோடு முக்கம் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ராகுலுக்கு முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.