விகடன் செய்தி எதிரொலி - ராசிமலை சென்ற ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் குமார் | OPS and Ravindranath kumar visits rasimalai and helps tribal people

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (09/06/2019)

கடைசி தொடர்பு:15:30 (09/06/2019)

விகடன் செய்தி எதிரொலி - ராசிமலை சென்ற ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் குமார்

பெரியகுளம் அருகே உள்ள ராசிமலை என்ற பழங்குடியின குடியிருப்பினை மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி ஆறு மாதம் ஆன நிலையில், இன்று வரை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவில்லை என தகவல் கிடைக்க, களத்துக்குச் சென்று அம்மக்களின் நிலையை ``வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்.! வேதனையில் தேனி பழங்குடியின மக்கள்!" என தலைப்பிட்டு விகடன் விரிவாக பதிவு செய்தது.

ராசிமலை

அச்செய்தியை அறிந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரின் மகனும் தேனி எம்.பியுமான ரவீந்திரநாத்குமார் அம்மக்களைச் சந்திக்க, இன்று நேரில் சென்றனர்.

ரவீந்திரநாத், ஓ.பி.எஸ்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது மஞ்சளாறு அணை. அணையை ஓட்டியப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. தரமற்ற வீடுகள் கட்டப்பட்டதால் பெரும் சிரமத்தைச் சந்தித்த அம்மக்களின் நிலையை அறிந்த மாவட்ட நிர்வாகம், இடியும் நிலையில் இருந்த 35 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஓ.பி.எஸ்

குடிசை மாற்றுவாரியம் சார்பில் விரைவில் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என உறுதியளித்தது. இதனால், தற்காலிகமாக டென்ட் அமைத்து பழைய குடியிருப்பின் அருகிலேயே வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக அந்த தற்காலிக குடியிருப்பும் சேதமடைந்தது. வீடு கட்டிக்கொடுக்கிறேன் என மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதியை நம்பி ஏமாந்துவிட்டதாக மிகவும் வருத்தப்பட்டனர் அம்மக்கள். இந்நிலையில், அவர்களின் நிலையை விகடன் பதிவு செய்தது.

நலத்திட்ட உதவிகள்

அதை அடுத்து இன்று காலை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்குமார் இருவரும் இன்று ராசிமலை சென்று அம்மக்களை சந்தித்துப் பேசினர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தவர்கள், குடிசை மாற்றுவாரியம் பணிகளை முடிக்கும் வரை, தற்காலிக குடியிருப்பில் வசிக்கத் தேவையான உதவித்தொகை ரூ.12,000 மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ரவீந்திரநாத்குமார் தேனி எம்.பி ஆன பின்னர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.