`ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோர் அ.தி.மு.க-வின் இரு கண்கள்!' - அமைச்சர் மணிகண்டன் | OPS and EPS are the two eyes of ADMK, says Minister Manikandan

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/06/2019)

கடைசி தொடர்பு:16:00 (09/06/2019)

`ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோர் அ.தி.மு.க-வின் இரு கண்கள்!' - அமைச்சர் மணிகண்டன்

அ.தி.மு.க-வின் இரு கண்களாக ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் உள்ளனர். அதில் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணெய்யும் வைத்துப் பார்க்க முடியாது என அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

அமைச்சர் மணிகண்டன்

ராமேஸ்வரத்தில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள் போடப்பட உள்ளது. இப்பணியை துவக்கி வைக்க அமைச்சர் மணிகண்டன் ராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராமேஸ்வரத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் தேர்தல் நடைமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் மணிகண்டன் பங்கேற்ற விழா

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கல்லூரியைத் துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்தக் கல்வி ஆண்டிலேயே கல்லூரி நிச்சயம் துவக்கப்படும்.

கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனச் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர். அதே நேரத்தில் அ.தி.மு.க-வின் இரு கண்களாக ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு கண்ணை சுண்ணாம்பாகவும், மறு கண்ணை வெண்ணெய்யாகவும் வைத்துப் பார்க்க விரும்பவில்லை. மக்களின் மாறுபட்ட மனநிலையால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் பரமக்குடி உள்ளிட்ட  9 தொகுதிகளை வென்றிருக்கிறோம்'' என்றவரிடம் `அமைச்சர் மணிகண்டனால் நான் எனது தொகுதிக்குச் செல்ல முடியவில்லை' என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு அமைச்சர் மணிகண்டனோ,``அப்படி ஒரு எம்.எல்.ஏ இருக்கிறாரா?'' எனக் கேள்வி எழுப்பினார். 

இந்நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் அ.தி.மு.க நிர்வாகிகள் கே.கே.அர்ச்சுனன், ஆர்.குணசேகரன், மகேந்திரன் மற்றும் பாலமுருகன், பசுமலை, முன்னாள் கவுன்சிலர் முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.