தண்ணீர் பிரச்னையில் கொல்லப்பட்ட தஞ்சை சமூக ஆர்வலர் - தலைமகனை இழந்து தவிக்கும் குடும்பம்! | Tanjore youth beaten to death over water sharing dispute

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (09/06/2019)

கடைசி தொடர்பு:17:00 (09/06/2019)

தண்ணீர் பிரச்னையில் கொல்லப்பட்ட தஞ்சை சமூக ஆர்வலர் - தலைமகனை இழந்து தவிக்கும் குடும்பம்!

தஞ்சாவூரில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், சமூக ஆர்வலரான ஆனந்த்பாபு அடித்துக் கொல்லப்பட்டார். அந்தக் குடும்பத்துக்கே ஜீவாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்த ஆனந்த்பாபு இறந்துவிட்டதால் வாழ்வதற்கு இனி என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் நிற்கதியாய் நிற்கிறது அவரின் குடும்பம். அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் மக்கள்.

ஆனந்த் பாபு

தஞ்சாவூர் அருகே உள்ள விளார் வடக்கு காலனியைச் சேர்ந்தவர் தர்மராஜ். விவசாயக் கூலியான இவரின் மகன் ஆனந்தபாபு. இவர்  சமூக சேவைக்கான பணிகளை ஆர்வமுடன் செய்து வந்தார். குறிப்பாக அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விபரம் அறியாத பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இல்லை என்றால் அதைப்பெற்றுத் தருவார். மேலும், ஆனந்த்பாபுவின் வீட்டுக்கு அருகிலேயே 26 குடும்பங்கள் பட்டா இல்லாமலேயே வசித்து வந்தனர். இதற்கு முயற்சி எடுத்ததோடு தஞ்சாவூர் கலெக்டரையும் சந்தித்து மனு கொடுத்தார் ஆனந்த்பாபு. இதையடுத்து அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா கிடைத்தது.

இதேபோன்று பல முறை கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைத்து வந்தார். மேலும், எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என மனு கொடுத்திருந்தார். ஆய்வு செய்த பிறகு நிறைவேற்றித் தருவதாக  அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 25 தினங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதால் குடிதண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். சில தினங்கள் அழைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வந்தனர். இதனால் பெரும் துயரம் அடைந்த அவர்கள் ஆனந்த் பாவிடம் முறையிட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் தர்மராஜ்

இதையடுத்து, அவர் எடுத்த பெரும் முயற்சிக்குப் பிறகு நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்கும் வரை தண்ணி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது நீ நல்லா இருக்கணுமய்யா என அந்தப் பகுதியே அவரை வாழ்த்தியது. அப்படி தண்ணீர் கொண்டு வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் அதிக குடங்களில் தன் குடும்பத்துக்கு வேண்டிய தண்ணீரை பிரிஸ்டிக் டியூப் கொண்டு பிடித்திருக்கிறார். இதை ஆனந்த்பாபு, குமாரிடம் தட்டிக்கேட்கவே பிரச்னை ஏற்பட்டது. இதை மனதில் வைத்துக்கொண்ட குமார் மற்றும் அவரின் மகன்களான கோகுல்நாத், கோபிநாத், ஸ்ரீநாத் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சில தினங்கள் கழித்து ஆனந்த்பாபுவின் வீடு புகுந்து இரும்புக் கம்பி மற்றும் கட்டை கொண்டு கடுமையாகத் தாக்கினர். இதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு கடும் காயம் ஏற்பட்டது. ஆனந்த்பாபுவுக்கு தலையின் பின் பக்கம் பலமாக அடிபட்டது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆனந்த்பாபு இறந்துவிட்டார். குமார் மற்றும் அவரின் மகன்கள் என நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த்பாபுவுக்கு வந்த வருமானத்தை வைத்துதான் அந்தக் குடும்பமே நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நிலையில், ஆனந்த்பாபு கொலை செய்யப்பட்டதால் அந்தக் குடும்பமே தவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவரின் நண்பர் கோபுவிடம் பேசினோம், ``ஆனந்த் பாபு எப்போதுமே சமூகசேவையிலும், சுற்றுச் சூழலிலும் ஆர்வம் கொண்டவன். பத்து வருடங்களுக்கு மேலாக அம்பேத்கர் பிறந்த நாள் தினத்தில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு கொடுத்து, பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி வந்தான். நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தான். தொடக்கத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணி செய்தவன், பின்னர் சமூக சேவையின் பக்கம் கவனத்தை செலுத்தினான். ஆனந்த்பாபு, அவன் வசிக்கும் பகுதி மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறான்.

ஆனந்த் பாபு

அசைவற்று இருந்த  அவனது உடல் கொண்டு வந்தபோது அந்தப் பகுதி மக்களே மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு அழுதனர். அப்போதுதான் அவனுடைய செயல்பாடு எல்லோருக்கும் தெரிந்தது. விவசாயி ஒருவர் நீண்ட நாள்களாக ரேஷன் கார்டு கிடைக்காமல் அலைந்து வந்தார். பின்னர் பாபு, அவருக்கு ரேஷன் கார்டை பெற்றுத் தந்தார். இதற்காக அந்த விவசாயி புறா ஒன்று பரிசாக கொடுத்தார் இதை `சமாதான புறா' என அன்போடு வளர்த்து வந்தான். ஆனந்த்பாபு இல்லாத, குரல் கேட்காத அந்த வீட்டில் இருக்க புறாவுக்கே பிடிக்கவில்லை. எங்கோ பறந்து சென்றுவிட்டது. அவன் வளர்த்த நாய் ஒன்று இன்று வரை இயல்பு நிலைக்கு திரும்பாமல் அலைந்து தவித்து வருகிறது. அனைத்து உயிர்கள் மீது அன்பு கொண்டவனின் ஆயுசு இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் எதிர் பார்க்கவில்லை. அதுவும் அவனால் இலவச பட்டா பெற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தாலேயே இது நடந்திருப்பது பேரதிர்ச்சி.

ஆனந்த்பாபுவுக்கு இரண்டு அக்கா, ஒரு தங்கச்சி அதில் ஒரு அக்காவுக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது. அவருக்கு மூளை வளர்ச்சியடையாத, கை, கால்கள் செயல் இழந்த நிலையில் 14 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உடல் நிலை முடியாத அப்பா, அம்மா என அந்தக் குடும்பத்துக்கே இவன்தான் ஜீவாதாரமாக, வாழ்வாதாரமாக இருந்தான். அவன் இல்லாமல் போனதால் அந்தக் குடும்பே, தற்போது நிர்கதியாய் நிற்கிறது. இனி எதிர்காலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் தலைமகனை இழந்து தவித்து வருகிறது.

சமூக ஆர்வலனாக செயல்பட்ட அவனுக்கு இந்த அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் அவன் தங்கச்சிக்கு அரசு வேலை வழங்கி அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் சமூகத்தின் மீது அக்கறையாக செயல்பட்ட ஆனந்த்பாபுவுக்கு செய்யும் மரியாதை. இதற்காக தஞ்சை கலெக்டரிடம் ஏராளமானவர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் திரண்டு, `இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்' என மனு கொடுக்க உள்ளோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க