‘என்னைய பார்த்து ஏன் முறைக்கிற’ - சீர்காழியில் பஸ் டிரைவர் ஓட ஓட விரட்டி படுகொலை | bus driver killed by gangsters in sirkazhi

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (09/06/2019)

கடைசி தொடர்பு:11:06 (10/06/2019)

‘என்னைய பார்த்து ஏன் முறைக்கிற’ - சீர்காழியில் பஸ் டிரைவர் ஓட ஓட விரட்டி படுகொலை

crime

சீர்காழி அருகே  இன்று பட்டப்பகலில் பஸ் டிரைவரை ஓடஓட விரட்டி படுகொலை செய்த இரண்டு ரவுடிகளின் பயங்கரம் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கைதான ரவுடி கார்த்திக்

கைதான ரவுடி கார்த்திக்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பரவங்காடு கிராமம் கேசவன் நகரைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் நடராஜமணி. இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பரவங்காட்டில் உள்ள தன் வீட்டுக்கு நடராஜமணியும் அவரின் தாயார் தனமும் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு.அதே தெருவில் வசித்து வரும் பாலையா மகன் கார்த்திக் என்பவர் குடிபோதையில் வந்துகொண்டிருந்தபோது வாசல் முன்பு நின்றுகொண்டிருந்த நடராஜமணியைப் பார்த்து ஏன் என்னைப் பார்த்து முறைக்கிறாய் என்று கேட்டுத் திட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அருகில் நின்றுகொண்டிருந்த தனத்தையும் திட்டினார்.

பேருந்து ஓட்டுநர் கொலை

கொலை செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர்

இதனால் கார்த்திக்குக்கும் தனத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தனத்தைத் தாக்கினார். இதில்  உதட்டில் காயம் ஏற்பட்ட தனம் இரவு 10 மணி அளவில் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகார் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடராஜமணி தனது வீட்டிலிருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் எதிரே நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது கார்த்திக் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரின் நண்பர் ராமசாமி மகன் சத்யா ஆகிய இருவரும் சேர்ந்து பட்டப்பகலில் கிராம மக்கள் கண்ணெதிரில் வீச்சரிவாளுடன் விரட்டி வந்து நடராஜமணியை சரமாரியாக வெட்டினர். கீழே விழுந்த நடராஜமணி தப்பிக்கும் முயற்சியில் எழுந்து ஓடினார். ஓடஓட விரட்டி நடராஜமணியை மீண்டும் வெட்டினர். அப்போது ரயில் நிலையம் எதிரே நடராஜமணி மயங்கி ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

உடன் சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் நடராஜமணியை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சில நிமிடங்களில் நடராஜமணியின் உயிர் பிரிந்தது. உடனடியாக ஆம்புலன்ஸில் இருந்து உடல் கொள்ளிடம் ரயில் நிலையம் எதிரே  இறக்கி வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைதான சத்யா

கைதான சத்யா

தகவலறிந்த நாகை எஸ்.பி விஜயகுமார் சீர்காழி டி.எஸ்.பி வந்தனா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இது குறித்து எஸ்.பி விஜயகுமார் பேசுகையில், "நடராஜமணியைக் கொலை செய்த கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கொலையாளி கார்த்திக் என்பவர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் தோப்பு தெருவைச் சேர்ந்த சுமன் என்பவரைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கொள்ளிடம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலிலும் கார்த்திக் பெயர் இடம் பெற்றுள்ளது. கொலையான நடராஜமணிக்கு வெண்ணிலா என்ற மனைவியும் மூன்றரை வயதில் கார்த்திகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. பட்டப்பகலிலேயே கொள்ளிடம் பகுதியில் நடந்த இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.