நெய்வேலி என்.எல்.சி-யில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு | Cuddalore NLC fire accident

வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (09/06/2019)

கடைசி தொடர்பு:08:10 (10/06/2019)

நெய்வேலி என்.எல்.சி-யில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் நிரந்தர தொழிலாளி உயிரிழப்பு. ஒருவர் பலத்த காயம் மருத்துவமனையில் அனுமதி.

 

நெய்வேலி என்.எல்.சி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (47). மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை (53) ஆகிய இருவரும் நிரந்தர பணியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இருவரும் இன்று காலை இரண்டாம் அனல் மின் நிலைய பாய்லர் டிவிஷனில் பணிபுரிந்து வந்தனர். அப்போது பாய்லரில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் இருந்த நிலக்கரி எரியத்தொடங்கியுள்ளது. அதனால் பயந்தபோன வேல்முருகன், பாவாடை ஆகிய இருவரும் அருகில் இருந்த லிப்டில் ஓடி ஒளிந்துள்ளனர். தீ விபத்தால் லிப்ட் தானாக மேலே சென்று அனல் மின் நிலைய 9வது மாடியில் இருவரும் சிக்கிக்கொண்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து அறிந்த என்.எல்.சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைத்த பின்னர், தொழிலாளி இருவரைக் காணவில்லை எனத் தேடியுள்ளனர். அப்போது அருகில் இருந்த லிப்ட் காணாததால் மேலே சென்று பார்த்தபோது 9வது மாடியில் லிப்ட்டில் இருவரும் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின்பு, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, இருவரும் மீட்கப்பட்டதில் வேல்முருகன் உயிரிழந்த நிலையிலும், பாவாடை ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டனர். உயிருக்குப் போராடிய பாவாடையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் என்.எல்.சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.