திருத்துறைப்பூண்டியில் களைகட்டிய 13-வது தேசிய நெல் திருவிழா | National paddy festival in thiruthuraipoondi

வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (09/06/2019)

கடைசி தொடர்பு:08:29 (10/06/2019)

திருத்துறைப்பூண்டியில் களைகட்டிய 13-வது தேசிய நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று 13 வது தேசிய நெல் திருவிழா தொடங்கியது.

நெல் திருவிழா

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வு நெல் திருவிழா. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கிரியேட் அமைப்பின் சார்பில் மறைந்த நெல் ஜெயராமனால் ஒருங்கிணைக்கப்பட்டு  நடைபெற்றுக்கொண்டிருந்தது. தொடர்ந்து 12 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில் நெல் ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் இல்லாத நிலையில் திருவிழா நடைபெறுமா எனப் பல விவசாயிகள் சந்தேகத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டும் கிரியேட் அமைப்பின் மூலமாகக் கோலாகலமாக இந்த ஆண்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா என வெகு விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விழாவின் முக்கிய நோக்கமே பாரம்பர்ய நெல்லை மீட்டெடுத்தல் ஆகும். 

திருத்துறைப்பூண்டி

விழாவில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “இன்றைக்கு உலகம் முழுவதும் திருவிழா என்றால் அவர்களது தெய்வத்தை வழிபாடு செய்வார். ஆனால், ஒரு தனி  மனிதன் தான் தெய்வமாகவே வணங்கிய விவசாயத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு விழாவை உருவாக்கினார் என்றால் அது நம்மாழ்வார். அவருடைய சீடரான நெல் ஜெயராமனால் சாத்தியமானது. இன்றைக்கு அவர் இல்லாவிடினும் அவருடைய சாதனைகள் பாடநூல்களின் மூலமாக அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்ந்துவிட்டது. இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய வரலாறு இடம்பெற்றிருப்பதை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்தகட்டமாக விவசாயத்தில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு நம்மாழ்வாரின் பெயரிலும் நெல் ஜெயராமன் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும்,  நெல் ஜெயராமனால் கண்டறியப்பட்ட நெல் ரகங்களைக் தொகுத்த பொக்கிஷம் என்ற புத்தக வெளியீடும் நடைபெற்றது.

புத்தகம் வெளியீடு

விருதுபெற்ற ருத்ரன் என்ற விவசாயிடம் பேசினோம். ``நான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். உணவு காடு என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம்  இளைய தலைமுறைக்கு விவசாயத்தைப் பரப்புகின்றோம். மதுரை வேளாண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன் நெல் ஜெயராமனின் பெயரால் வழங்கப்பட்ட இந்த விருது என்னை ஊக்குவிப்பதோடு மேலும் பல இளைஞர்களை உருவாக்குவதற்கு இது ஒரு ஊக்கசக்தியாகக் கருதுகிறேன்’’ என்றார் .

சித்ரா

இந்தவிழா குறித்து நெல் ஜெயராமனின் மனைவி சித்ராவிடம் பேசியபோது, ``இன்றைக்கு விழா இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது சமயம் அவர் இல்லாமல் இந்த விழாவில் நான் ஒரு நடைப்பிணமாகவே நின்றுகொண்டிருக்கிறேன். அவர் இருந்திருந்தால் இன்று மேடையில் நின்றிருக்கக்கூட மாட்டார் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்துகொண்டிருப்பார். இன்றைக்கு என் கண்களில் தென்பட மாட்டாரா என்று ஏக்கத்தோடு பார்த்தாலும் அவர் படமாட்டார் என்ற நிதர்சனமான உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது” என்று உருக்கத்தோடு தெரிவித்தார்.

 உலகம் முழுவதும் பார்க்கும் இந்த நெல் திருவிழா 12 ஆண்டுகளைக் கடந்து 13-ம் ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு நாளும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பச்சை நிறத்தில் திருவிழா கோலமாகக் காட்சியளிப்பது கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு இதுபோன்ற ஒரு விழா, ஒரு சிறு கிராமத்தில் நடைபெறுவது நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர் .