‘இஸ்ரோ விஞ்ஞானிகளை உருவாக்கிய பள்ளி அது’ - நீலகிரியில் அரசுப் பள்ளிகளுக்கு நேர்ந்த துயரம் | Government close 8 schools due to lack of students in nilgiri

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (10/06/2019)

கடைசி தொடர்பு:09:02 (10/06/2019)

‘இஸ்ரோ விஞ்ஞானிகளை உருவாக்கிய பள்ளி அது’ - நீலகிரியில் அரசுப் பள்ளிகளுக்கு நேர்ந்த துயரம்

மாணவர் எண்ணிக்கை குறைவு எனக் காரணம் காட்டி நீலகிரி மாவட்டத்தில் 8 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 12 பள்ளிகள் மூடவுள்ளதால் ஏழை மாணவ மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

நீலகிரி அரசு பள்ளிகள்

மலை மாவட்டமான நீலகிரியில் பெரும்பாலானவர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மலை காய்கறி விவசாயக் கூலிகளாக உள்ளனர். கூலித் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகளே தற்போது அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அதுவும் அவர்களில் முதல் தலைமுறை மாணவர்களே அதிகம். கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல முளைத்துவிட்டன. மெட்ரிக், ஐ.சி.எஸ் மற்றும் சி.பி.எஸ்.இ எனப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வசதி குறைந்த பெற்றோர்கள்கூட தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதைத் தவிர்க்கின்றனர்.

மாணவர்கள்

மேலும் கடன் வாங்கியேனும் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தியே படிக்க வைக்கின்றனர். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்திப் படிக்க வைக்க முடியாத பெற்றோர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் மாணவர்களைப் படிக்க வைத்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சில தொடக்கப் பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஒற்றை இலக்க எண்களில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை மூடிவிட்டு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க கல்வித்துறை வற்புறுத்தி வருகிறது.

அரசு பள்ளிகள்

இதன் தொடக்கமாக, தற்போது ஊட்டி, குன்னூர், குந்தா பகுதிகளில் கெத்தை நடுநிலைப்பள்ளி, தங்காடு நடுநிலைப்பள்ளி, தங்காடு ஒரநள்ளி தொடக்கப்பள்ளி, காந்திபுரம் தொடக்கப்பள்ளி, இடுஹட்டி உயர்நிலைப் பள்ளி, கீழூர் கோக்கலாடா உயர்நிலைப் பள்ளி, பந்துமி தொடக்கப்பள்ளி, தேவி வியூ தொடக்கப்பள்ளி என மொத்தம் 8  அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வரும் 12 பள்ளிகள் அடுத்தகட்டமாக மூடுவதற்கான நடவடிக்கையில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இது நீலகிரி மாவட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி வெறும் கனவாகவே மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள்

நீலகிரியில் பள்ளிகள் மூடப்படுவது குறித்து குன்னூர் நகர நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத் தலைவரும் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருமான மனோகரன் கூறுகையில், “நீலகிரியில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது ஏழை மாணவர்களின் வாழ்வை இருளடிக்கும் செயலாக உள்ளது. தற்போது மூடப்பட்டுள்ள கீழூர் கோக்கலாடா அரசுப் பள்ளியில்தான் நானும் பயின்றேன். இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் எனப் பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளி இன்று மூடப்பட்டுள்ளது. பல தனியார் பள்ளிகள் விதிகளை மீறித் திறக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களுக்குக் கடிவாளம் போட்டால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாகக் கல்வியின் தரத்தை உயர்த்தினால் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல வாய்ப்பில்லை. தற்போது நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் கல்வித்துறை இறங்கியுள்ளது தவறானது. கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் தொடர்ந்து நடத்திட வேண்டும். கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்’’ என்றார்.