திடீரென பழுதான மோட்டார் - நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சரக்குக் கப்பல் ஊழியர்கள்! | Cargo ship employees recovered 6 fishermen in Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (10/06/2019)

கடைசி தொடர்பு:10:40 (10/06/2019)

திடீரென பழுதான மோட்டார் - நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சரக்குக் கப்பல் ஊழியர்கள்!

கேரள மாநில கடல் எல்லையில் படகு பழுதடைந்ததால் கடலில் தத்தளித்த குமரி மாவட்ட மீனவர்கள் ஆறு ‌பேரை சரக்குக் கப்பல் ஊழியர்கள் மீட்டனர்.

மீனவர்

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி, வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், நீரோடியைச் சேர்ந்த ஆல்பிரட் என்பவருக்குச் சொந்தமான `ஆச்சர்ய மாதா’ என்ற மோட்டார் பொருத்திய நாட்டுப் படகில் கேரள மாநிலம் நீண்டகரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 6-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது நேற்று காலை திடீரென படகு பழுதடைந்தது. கரையிலிருந்து 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் பழுதடைந்த படகில் 6 மீனவர்களும் தத்தளித்தனர். நேற்று மாலை வரை அந்த வழியாக எந்த மீன்பிடிப் படகுகளும் செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று இரவு அந்த வழியாக சிங்கப்பூரைச் சேர்ந்த எமரால்டு-3 என்ற சரக்குக் கப்பல் வந்துள்ளது. கடலில் தத்தளித்த மீனவர்களைப் பார்த்த சரக்குக் கப்பல் ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டனர்.

மீனவர்

ஆனால், அவர்களின் படகை மீட்க முடியவில்லை. பின்னர், இந்திய கடற்படைக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களை கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வருகின்றனர். கொச்சி துறைமுகத்துக்கு வரும் மீனவர்கள் இன்று சொந்த ஊர் வர உள்ளனர். `நடுக்கடலில் பழுதடைந்து கிடக்கும் நாட்டுப் படகை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கோரிக்கை விடுத்துள்ளார்.