'பா.ஜ.க ஜெயிக்கவே ஜெயிக்காது!' - தன் முன் கோஷமிட்ட மகனை என்ன செய்யப்போகிறார் தமிழிசை? | why tamilisai soundararajan not taken action against his son?

வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (10/06/2019)

கடைசி தொடர்பு:11:24 (10/06/2019)

'பா.ஜ.க ஜெயிக்கவே ஜெயிக்காது!' - தன் முன் கோஷமிட்ட மகனை என்ன செய்யப்போகிறார் தமிழிசை?

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் பரப்புரையின்போது 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என்று தமிழிசை பேசுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கொஞ்சம் ஆதரவு உள்ள கன்னியாகுமரி, கோவை தொகுதிகளிலும்கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியாமல் போனது. கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் படுதோல்வியடைந்தார். தேர்தல் தோல்விகளுக்குத் தமிழிசை பல காரணங்களைச் சொல்லி வந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை மாற்றப்படலாம் என்கிற தகவலும் பரவியது. விஷயம் இப்படியிருக்க, தமிழிசைக்கு அவரின் குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 

தமிழிசை- சோபியா

சென்னை விமான நிலையத்தில் தமிழிசை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் அங்கே குழுமியிருந்தனர். அப்போது, பா.ஜ.க தலைவர் பேட்டியளித்த இடத்துக்கு வந்த அவரின் மகன் சுகநாதன், தமிழிசை முன்னிலையிலேயே பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார். 'தமிழகத்தில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது' என்றும் அவர் கத்தினார். தமிழிசை மகனே பொது இடத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சுகநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

தனக்கும் தன் மகனுக்கும் குடும்ப பிரச்னை இருப்பதாகவும் அதன் காரணமாகவே பொது இடத்தில் இப்படி கோஷம் எழுப்பியதாகவும் தமிழிசை கூறிச் சமாளித்தார். கடந்த வருடத்தில் ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குத் தமிழிசை விமானத்தில் சென்றார். விமானத்தில், 'பாசிச பாரதிய ஜனதா ஒழிக' என்று சோபியா என்ற மாணவி கோஷம் எழுப்பினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து தமிழிசை சோபியாவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, மாணவி மீது போலீஸில் புகார் அளித்து கைது செய்யவும் வைத்தார். தற்போது, தமிழிசை மகனே விமான நிலையத்தில் அவரின் முன்னிலையிலேயே  பாரதிய ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார். இப்போது, என்ன செய்யப்போகிறார்? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க