விருதுநகர் பூங்காக்கள்... பராமரிப்பின்றி பாழாகும் அவலம்..! | Virudhunagar parks are not undergoing proper maintenance

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (10/06/2019)

கடைசி தொடர்பு:15:36 (10/06/2019)

விருதுநகர் பூங்காக்கள்... பராமரிப்பின்றி பாழாகும் அவலம்..!

விருதுநகர் பூங்காக்கள்... பராமரிப்பின்றி பாழாகும் அவலம்..!

விருதுநகர் மாவட்டத்தில் தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 10 பூங்காக்களில் ஒன்று மட்டுமே இளைஞர்களின் முயற்சியால் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்றவை பராமரிப்பின்றிக் கிடப்பதால், மக்களும், சிறார்களும் பயன்படுத்த முடியாமல் இருக்கும் அவலம் நீடிக்கிறது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. ஆனால் கல்வி, விளையாட்டு என நகர்ப்புற இளைஞர்களுக்குக் கிடைப்பது போன்ற பயிற்சிகள் கிராமங்களில் இருக்கும் சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைப்பதில்லை.  நகர்ப்புறங்களிலோ பல பயிற்சி மையங்கள், பயிற்சியாளர்கள் உள்ளனர். எனவே, கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களிடையே விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசின் "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 500 இடங்களில் உடற்பயிற்சிக்கூடத்துடன் கூடிய அம்மா பூங்காக்கள் அமைக்கப்படும்" என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

பந்தல்குடி பூங்கா

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து 10 ஒன்றியங்களில் இத்தகைய உடற்பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கிருஷ்ணாபுரம், ஆவியூர், சத்திரரெட்டியப்பட்டி, மகாராஜபுரம், பந்தல்குடி, படிக்காசுவைத்தான்பட்டி, எட்டக்காபட்டி, தேவர்குளம், வெங்கடாசலபுரம், திருச்சுழி ஆகிய 10 இடங்களில் கழிப்பறை வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடங்கள் இந்தப் பூங்காக்களில் அமைக்கப்பட்டன. அவற்றில் தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு, குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல், சறுக்குப் பலகை போன்ற விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சிக்கூடத்துக்குத் தேவையான உபகரணங்களுக்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு அவை வாங்கப்பட்டன.

பூங்காவில் உடைந்து கிடக்கும் உபகரணங்கள்

ஆனால், ரூ.30 லட்சத்துக்கு அமைக்கப்பட்ட பெரும்பாலான பூங்காக்கள், எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் இளைஞர்களும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது உள்ளன. சில இடங்களில் இதுவரை அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக்கூடங்கள் திறக்கப்படவே இல்லை. ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை. பெரும்பாலானவற்றில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடங்களில் இருந்த உபகரணங்கள் உடைக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.

சிறுவர்

பந்தல்குடியில் உடற்பயிற்சிக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் கிராமத்தினரே சுவரை உடைத்துவிட்டனர். உள்ளே இருந்த விளையாட்டு உபகரணம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களையும் சேதப்படுத்திவிட்டனர். அடுத்த சில மாதங்களில் இந்தப் பூங்காக்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் நிலை உருவாகியுள்ளது. மகாராஜபுரத்தைத் தவிர மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பூங்காக்களின் நிலை இதுதான். மாறாக, மகாராஜபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் மட்டுமே சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் அந்தக்  கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அமைப்பின் முயற்சிதான்.

பயிற்சி

இதுகுறித்து கிராம இளைஞர் அமைப்பைச் சேர்ந்த அழகுராஜிடம் கேட்டபோது, ``எங்கள் கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன் இந்தப் பூங்கா திறக்கப்பட்டது. ஊராட்சியில் போதிய நிதி இல்லாததால் இளைஞர்கள் சேர்ந்து பராமரித்து வருகிறோம். பராமரிப்புக்கென ஒரு நபரை நியமித்துள்ளோம். காலையும், மாலையும் பொதுமக்கள் பூங்காவுக்குள் வர அனுமதி உண்டு. பூங்காவுக்கான நுழைவுக்கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.2-ம், உடற்பயிற்சிக் கூடத்துக்கான கட்டணமாக மாதம் ரூ.100-ம் வசூலிக்கிறோம். ஒரு நாளைக்கு 50 அல்லது 100 பேர் வரை வருகிறார்கள்.

அழகுராஜ்

பூங்காவுக்கு வருபவர்களிடம் வாங்கும் கட்டணத்தை, அந்தப் பூங்காவைப் பராமரிப்பவருக்குச் சம்பளமாக வழங்குகிறோம். இங்கே ஆழ்குழாய் கிணறு வசதி இல்லாததால் கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை. தண்ணீர் வசதி செய்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பூங்காவுக்கு அருகே உள்ள மதுக்கடையால் சில நேரங்களில் பெண்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. அந்தக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்றார்.

பூங்காவை அமைத்ததோடு சரி. அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும், பொதுமக்கள் பயனடையும் வகையில் எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. லட்சக்கணக்கில் செலவழித்து, அமைக்கப்பட்ட பூங்காக்கள் மிகக் குறைந்த நாட்களிலேயே பயன்பாடின்றி போவதைத் தடுத்து, அந்தப் பூங்காக்களை முறையாகப் பராமரித்தால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்; கிராமப்புற இளைஞர்களின் உடல் நலனும் பேணப்படும்" என்கிறார்கள் சம்பந்தப்பட்ட கிராம மக்கள்.


டிரெண்டிங் @ விகடன்