`கருணாநிதிக்கு கார் ஓட்டியவர்; 5 முறை எம்.எல்.ஏ!' - முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமனின் வாழ்க்கை | Puducherry former chief minister R.V.Janakiraman Passed away

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (10/06/2019)

கடைசி தொடர்பு:12:53 (10/06/2019)

`கருணாநிதிக்கு கார் ஓட்டியவர்; 5 முறை எம்.எல்.ஏ!' - முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமனின் வாழ்க்கை

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.

ஆர் வி ஜானகிராமன்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள ஆலத்தூரில் 1941-ம் ஆண்டு பிறந்த இவர், தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் முரசொலி மாறனுக்கு கார் ஓட்டியதன் மூலம் தி.மு.க-வில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1985-ம் ஆண்டு புதுச்சேரி நெல்லித்தோப்புத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டப்பேரவையில் நுழைந்ததுடன் 1988-ல் தி.மு.க-வின் புதுச்சேரி மாநிலக் கழகப் பொருளாளராகப் பொறுப்பேற்றார். 1990 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அதே நெல்லித்தோப்பு தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்று பொதுப்பணித்துறை அமைச்சரானார். தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதியில் 1985, 1990, 1991, 1996 மற்றும் 2001 எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றார்.

சட்டப்பேரவைக் கொறடா, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்த இவர், தற்போது வரை தி.மு.க-வின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தி.மு.க-வின் அனைத்து நிகழ்வுகளும் புதுச்சேரியில் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அவரின் உடல் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முன்னால் முதல்வர்

அவரது உடலுக்கு முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை (11.06.2019) காலை 7 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்பு மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் நாளை காலை 9.30 மணிக்கு புதுச்சேரி அரசின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை