`முதலில் தடுப்பு வேலி; அடுத்து பைக்குகளில் மோதல்!' - சினிமா சண்டைக்காட்சிபோல நடந்த விபத்து | cctv footage of chennai car accident released

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (10/06/2019)

கடைசி தொடர்பு:13:03 (10/06/2019)

`முதலில் தடுப்பு வேலி; அடுத்து பைக்குகளில் மோதல்!' - சினிமா சண்டைக்காட்சிபோல நடந்த விபத்து

சென்னை அகரம் தென் மெயின் ரோடு மப்பேடு சந்திப்பில் நேற்று மாலை மின்னல் வேகத்தில் சிவப்பு நிற கார் வந்தது. சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அந்தக் கார் முதலில் இடித்துத் தள்ளியது. பிறகு, அவ்வழியாக பைக்கில் சென்றவர்கள் மீது கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. சினிமா சண்டைக்காட்சிகள் போல இந்த விபத்து நடந்துள்ளது.

பைக்குள் மீது கார் மோதிய விபத்து

கார் மோதியதில் பைக்கிலிருந்து கீழே விழுந்தவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தினர். 

இந்தச் சம்பவத்தில் அகரம் தென் மெயின் ரோடு பதுவஞ்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் கிளாட்சன் கேன்வாஸ் பிரபு (18), அவரின் நண்பர் விக்ரம் (18), மப்பேடு, முத்துமாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (40), அவரின் மனைவி சாந்தி (35) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். மாணவர் கிளாட்சன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளர். லேசான காயம் அடைந்த விக்ரம், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிவிட்டார். மப்பேடு, கலைஞர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம், சாந்தி ஆகிய இருவரும் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

  பைக்குள் மீது கார் மோதிய விபத்து

விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் இருந்த தடுப்பில் மோதும் கார், தடுப்பு கம்பியோடுதான் பைக்குளில் மோதுகின்றன. இதனால் பைக்கில் சென்றவர்கள் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். ஆறுமுகமும் சாந்தியும் சாலையில் ஒரு பகுதியிலும் கிளாட்சனும் விக்ரமும் இன்னொரு இடத்திலும் விழுந்து அப்படியே கிடக்கின்றனர். இதைப் பார்த்தவர்கள் பதறியபடி சம்பவ இடத்துக்கு வந்து முதலுதவி செய்கின்றனர். இந்த வீடியோ காட்சியைப் பார்த்த போலீஸார், தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்வையிட்டனர். 

சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திய சிவப்பு நிற காரின் பதிவு நம்பரை போலீஸார் கண்டறிந்தனர். அந்தக் காரை ஓட்டியவர் பதுவஞ்சேரி, அகரம் தென்மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வரதன் (54) என்று தெரியவந்தது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விபத்தை ஏற்படுத்திய கார், 60 கி.மீ வேகத்திலிருந்து 80 கி.மீ வேகத்தில் சென்றிருக்க வேண்டும். வாகன சோதனைக்காக அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியைக் கடக்கும்போது வாகனங்களின் வேகம் குறையும். ஆனால், விபத்தை ஏற்படுத்திய சிவப்பு நிற கார், வேகத்தைக் குறைக்காமல் தடுப்பு வேலியில் மோதிவிட்டு முன்னால் சென்ற பைக்குகளை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. காரை ஓட்டிய வரதன், குடிபோதையில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் தடுப்பு வேலியை மோதியும் அவர் காரின் வேகத்தைக் குறைக்கவில்லை. 

பைக்குள் மீது கார் மோதிய விபத்து 

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஆறுமுகம், தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். வீட்டுக்குச் செல்வதற்காக ஆறுமுகமும் அவரின் மனைவி சாந்தியும் பைக்கில் வந்துள்ளனர். கார் மோதியதும் ஆறுமுகமும் சாந்தியும் சாலையில் விழுகின்றனர். கீழே விழுந்த ஆறுமுகம், எழுந்து மனைவியைத் தூக்குகிறார். ஆனால், அவரால் முடியவில்லை. அதன் பிறகே சாந்தியை ஆம்புலன்ஸ் மூலம் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றனர். 

 பதற வைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் 

விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. சிவப்பு நிற கார், மோதி பைக்கில் சென்றவர்கள் சாலையில் ஆங்காங்கே விழுகின்றனர். அந்தச் சாலையில் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு காயமடைந்தவர்களுக்கு உதவி செய்தனர். ஆனால், விபத்து ஏற்படுத்திய காரின் டிரைவர் மனிதநேயமில்லாமல் மின்னல் வேகத்தில் செல்கிறார். அவரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், சினிமா சண்டைக்காட்சிகள்போல இருந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் வரதன், காரை நிறுத்திவிட்டு தப்பிச் செல்லும் காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து ஏற்படுத்திய காரை போலீஸார் மீட்டுள்ளனர். 

இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோரின் லைசென்ஸை ஏன் ரத்து செய்யக் கூடாது என்ற கேள்வியை இன்று எழுப்பினார். அதோடு விபத்தில் உயிர்பலி ஏற்படும்போது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஏன் இதுவரை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.