ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை! - தோப்பூரில் ஜப்பான் நிதிக்குழு நேரில் ஆய்வு | japan team visit madurai aiims hospital area

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (10/06/2019)

கடைசி தொடர்பு:14:00 (10/06/2019)

ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை! - தோப்பூரில் ஜப்பான் நிதிக்குழு நேரில் ஆய்வு

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ்  மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மத்திய நிதிக்குழு மற்றும் ஜப்பானியக் குழுவினர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

aims

மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் தென் மாவட்டப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 263 ஏக்கர் பரப்பளவில் சுமார் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ்  மருத்துவமனை அமைய உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று காலை மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சஞ்சய் ராய் தலைமையில் மத்திய குழுவினர், ஜப்பானிய நிதி குழுவினர், தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்கத் துணை இயக்குநர் சபிதா மற்றும் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் டீன் வனிதா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது நோயாளிகள் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடத்தில் என்ன, என்ன வசதிகள் தேவைப்படும். அவை இப்பகுதியில் முறையாகக் கிடைக்குமா என்பது குறித்து ஆராய்ந்தனர்.

எய்ம்ஸ்

அதைத் தொடர்ந்து முறையான நிதியைக் கடன் தொகையாக வழங்குவதற்கு ஜப்பானிய மற்றும் மத்திய குழுவினர் எழுத்துபூர்வமான அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தனர். மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினாலும் அங்கு மருத்துவமனை அமையுமா? அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில்  தோப்பூரில் ஆய்வுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் நம்பிக்கையடைந்துவருகின்றனர். 

இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரக துணை இயக்குநர் சபிதா, "எய்ம்ஸ் அமைய உள்ள இடங்கள் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள 224 ஏக்கர் நிலத்தை சுற்றி ரூ.15 கோடியில் தடுப்புச் சுவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தடுப்புச் சுவர் கட்டும் பணி சில நாள்களில் தொடங்கி 3 மாதத்தில் நிறைவடையும்" என்று தெரிவித்தார்.