`கட்டுப்பாடு இந்த மூன்று பேருக்குப் பொருந்தும்!' - யாரைச் சொல்கிறார் ராஜன் செல்லப்பா | Rajan Chellappa discussed with party members about admk leader

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (10/06/2019)

கடைசி தொடர்பு:13:15 (10/06/2019)

`கட்டுப்பாடு இந்த மூன்று பேருக்குப் பொருந்தும்!' - யாரைச் சொல்கிறார் ராஜன் செல்லப்பா

கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று எடப்பாடியும்  ஓ.பி.எஸ்ஸும் அறிக்கை விடுத்த பிறகும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல், இன்று தன் ஆதரவாளர்ளுடன் உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் ஆதரவாளர் கூட்டத்தைத் திருப்பரங்குன்றத்தில் நடத்தினார் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இது மீண்டும் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜன் செல்லப்பா

இரட்டைத் தலைமை கூடாது, ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கடந்த 7-ம் தேதி கொடுத்த பேட்டியால் அ.தி.மு.க-வே கலகலத்துப்போயுள்ளது. செல்லப்பாவின் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் எந்தக் கருத்தும் சொல்லாமல் அ.தி.மு.க அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 12-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்துள்ள கட்சித்தலைமை, பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என்று அறிக்கை விட்டுள்ளனர். அதையும் மீறி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியுள்ளார் ராஜன் செல்லப்பா. 'தான் பேசியது அனைத்தும் உண்மை. அந்தக் கருத்தில் பின் வாங்க மாட்டேன்' என்று கூறிவரும் ராஜன் செல்லப்பா, இன்று நடத்திய கூட்டத்தில், "அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். அது நடக்காது. வரும் உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

கட்சித் தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றி கட்சி கட்டுப்பாட்டை காக்க வேண்டும். அதேநேரம், கட்டுப்பாடு என்பது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் மற்றும் முனுசாமிக்கும் பொருந்தும்" என்றார்.

கூட்டம் முடிந்தும் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார் ராஜன் செல்லப்பா.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க