`டல்' அடிக்கும் மெயின் அருவி; குதூகலத்தில் ஐந்தருவி!'- குற்றாலத்தில் தொடங்கியது சீசன் | courtallam session started as south west monsoon

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (10/06/2019)

கடைசி தொடர்பு:14:20 (10/06/2019)

`டல்' அடிக்கும் மெயின் அருவி; குதூகலத்தில் ஐந்தருவி!'- குற்றாலத்தில் தொடங்கியது சீசன்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக ஐந்தருவியில் தண்ணீர் கொட்டத் தொடங்கியது. குற்றாலம் சீசன் தொடங்கியதால், மனதுக்கும் உடலுக்கும் இதமாகக் குளிர்ந்த காற்றுடன் சாரல் அடிக்கிறது

குற்றாலம் சீசன் தொடக்கம்

நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்கள் குற்றாலம் சீசன் களைகட்டுவது வழக்கம். இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கியதால் சீசன் சற்று தாமதத்துடன் தொடங்கி இருக்கிறது. கடந்த இரு தினங்கள் வரையிலும் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது வெயில் ஓய்ந்துள்ளது. 

குற்றாலம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இன்று (10-ம் தேதி) குளுமையான காற்றுடன் சாரல் மழை பெய்தது. சீசன் அறிகுறிகள் தென்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மலைப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக ஐந்தருவில் தண்ணீர் விழத்தொடங்கியது. ஓரிரு பிரிவுகளில் விழுந்த தண்ணீர் அதிகரித்து அனைத்துப் பிரிவுகளிலும் விழுந்தது.

களக்காடு தலையணை 

இருப்பினும் மெயின் அருவியில் இன்னும் தண்ணீர் விழவில்லை. அதனால் மெயின் அருவி விழும் இடம் பாறையாகக் காட்சியளிக்கிறது. சீசன் தொடங்கிவிட்டதால் அடுத்த ஓரிரு நாளில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்யத் தொடங்கியதால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

பாறையாகக் காட்சியளிக்கும் மெயின் அருவி

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு தற்போது 1153 கன அடி தண்ணீர் வருகிறது. அதனால் அந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி கூடுதலாக 20 அடியாக அதிகரித்தது. இது தவிர களக்காடு தலையணை வறண்டு கிடந்த நிலையில், தற்போது தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.