`அறைக்குள் விவாதிப்போம்; அம்பலத்தில் விவாதிக்காதீங்க!'- கட்சியினருக்கு ஜெயக்குமார் அட்வைஸ் | TN Minister jayakumar addressed on admk issues

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (10/06/2019)

கடைசி தொடர்பு:14:40 (10/06/2019)

`அறைக்குள் விவாதிப்போம்; அம்பலத்தில் விவாதிக்காதீங்க!'- கட்சியினருக்கு ஜெயக்குமார் அட்வைஸ்

ஜெயக்குமார்

 உட்கட்சி விவகாரங்களை அ.தி.மு.கவினர் பொதுவெளியில் பேசுவதை கட்சி தலைமை விரும்பவில்லை. சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கட்சிக்கு ஒரு தலைமைதான் இருக்க வேண்டும் என நேற்று முன்தினம் ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய விவகாரம் அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கடிவாளம் போடும் விதமாகத்தான் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், கழக உடன்பிறப்புகள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வரும் கருத்துகள் வரவேற்கத் தக்கவையாக இல்லை. இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்பட வேண்டும். கழக நிர்வாக முறை, தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கழகத்தின் முடிவுகளைப் பற்றியோ பொதுவெளியில் கருத்து கூற வேண்டாம்'' எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. ஒற்றைத் தலைமை தொடர்பாகப் பேசவேண்டிய காலமும் இதுவல்ல. ஒற்றைத் தலைமை குறித்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முடிவு செய்ய முடியாது. கட்சி என்றால் சிறு சிறு பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அ.தி.மு.கவினர் அமைதியாக இருக்க வேண்டும். உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம். அறையில் விவாதிக்க வேண்டியதை எல்லாம் அம்பலத்தில் விவாதிக்கக் கூடாது. அண்ணா கூறியதுபோல் துண்டு என்பது பதவி. வேட்டி என்பது மானம் போன்றது. எங்களுக்கு மானம்தான் முக்கியம். திமிங்கிலங்களைப் போல் எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியைக் கலைக்க பார்க்கிறார்கள்” என்றார்.