`வேறு சமூக இளைஞருடன் காதல் திருமணம்!’- மகளுக்குக் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை | Father puts obituary banner for daughter, who had inter caste marriage irked outrage in Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (10/06/2019)

கடைசி தொடர்பு:15:50 (10/06/2019)

`வேறு சமூக இளைஞருடன் காதல் திருமணம்!’- மகளுக்குக் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை

ஆம்பூர் அருகே வேறு சமூக இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், உயிரோடு இருக்கும் மகள் இறந்துவிட்டதாகக் கூறி, தந்தையே ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த குப்பராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி இவராணி. இவர்களது மகள் அர்ச்சனா. இந்தப் பெண்ணும், அதேப் பகுதியில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்துவந்தனர். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவந்தது. மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்துகொண்டார். மணக்கோலத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த சரவணன், மகள் இறந்துவிட்டதாகக் கூறி தலைமுழுகினார். பின்னர், ஃபிளக்ஸ் பேனர் அடித்து ஊர் முழுவதும் வைத்தார். பேனரில், ``என் அன்பு மகள் அர்ச்சனா 9-ம் தேதி மதியம் 2 மணியளவில் அகால மரணமடைந்தார். மகளின் பூவுடல் 10-ம் தேதி குப்பராஜபாளையம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும். இப்படிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார். உயிரோடு இருக்கும் மகளுக்குத் தந்தையே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சம்பவம், ஆம்பூர் மக்களை உலுக்கியிருக்கிறது.