`புத்தகங்களுடன் சாலையில் உருண்டனர்!' - திரும்பிப் பார்க்கவைத்த மாணவர்களின் போராட்டம் | Ramnad village student staged protest over damaged roads

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (10/06/2019)

கடைசி தொடர்பு:16:05 (10/06/2019)

`புத்தகங்களுடன் சாலையில் உருண்டனர்!' - திரும்பிப் பார்க்கவைத்த மாணவர்களின் போராட்டம்

கமுதி அருகே, சாலையை சீரமைக்கக் கோரி பாடப் புத்தகங்களுடன் மாணவர்கள் சாலையில் உருளும் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

சாலையை சீரமைக்க கோரி சாலையில் உருண்டு மாணவர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளது கோடங்கிப்பட்டி கிராமம். சுமார் 300 குடும்பங்கள் இங்கு வசித்துவருகின்றன. பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியும் இயங்கிவருகிறது. இந்தக் கிராமத்துக்கு, விருதுநகர் மாவட்டம் ஆனைக்குளம் வழியாக மட்டுமே செல்ல சாலை வசதி உண்டு. ஆனைக்குளத்தில் இருந்து 12 கி.மீ தூரம் செல்லும் சாலை, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. கோடங்கிப்பட்டியில் வசிப்பவர்கள், அத்தியாவசிய பொருள்கள் வாங்கவோ மருத்துவ வசதிகளுக்காகவோ இந்தச் சாலை வழியாகத்தான் செல்லும் நிலை உள்ளது. இதேபோல் ஆரம்பக் கல்வி முடிக்கும் மாணவர்கள், தங்கள் கல்வியைத் தொடரவும் ஆனைக்குளத்திற்கே செல்கின்றனர்.

மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திரண்ட கிராமத்தினர்

இந்நிலையில், ஆனைக்குளத்தில் இருந்து கோடாங்கிப்பட்டி கிராமத்துக்குச் செல்லும் சாலையை புதிதாகப் போடுவதற்கு பணிகள் நடந்துவந்தன. ஆனால், இதற்கு கோடாங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள பூமாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இருக்கும் சாலையும் குண்டும் குழியாகக் கிடப்பதால், அவசரத்துக்கு வாகனங்களோ ஆம்புலன்ஸோ செல்ல முடியவில்லை. மேலும், பள்ளிகள் தொடங்கிவிட்டதால் பள்ளி செல்லும் மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, குண்டும்குழியுமாகக் கிடக்கும் சாலையைச் செப்பனிட வழியுறுத்தி, கோடங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடப் புத்தகங்களுடன் சாலையில் உருளும் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக, கோடங்கிப்பட்டி கிராம மக்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திரும்பிப் பார்க்கவைக்கும் மாணவர்களின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.