``திருப்புமுனை ஏற்படுத்திய கலெக்டரம்மா நல்லா இருக்கோணும்'' - சேலம் பார்வையற்றோர் நெகிழ்ச்சி | Salem district collector distributed cell phones with special features to differently abled peoples

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (10/06/2019)

கடைசி தொடர்பு:16:35 (10/06/2019)

``திருப்புமுனை ஏற்படுத்திய கலெக்டரம்மா நல்லா இருக்கோணும்'' - சேலம் பார்வையற்றோர் நெகிழ்ச்சி

கலெக்டர்

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி இன்று தன்னுடைய விருப்ப நிதியிலிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள பார்வையற்றவர்கள் 150 பேருக்கு 1500 மதிப்புடைய சிறப்பு வசதியோடு கூடிய செல்போன்களை வழங்கினார். அந்த செல்போன்களை வாங்கிய பார்வையற்றவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்ததோடு, இது தங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சியடைந்தார்கள்.

செல்போன் பெற்றுக்கொண்ட டேனிஷ்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன், ``எங்கப்பா, அம்மா கூலி வேலை செய்யறாங்க. என் கூட பிறந்தவங்க ஒரு அக்கா, ஒரு தம்பி. அவுங்களுக்கு திருமணமாகி அவுங்க குடும்பத்தோட தனியாக வசிக்கிறாங்க. எனக்குப் பிறவியில் இருந்தே கண் பார்வை கிடையாது. நான் ஊத்துபத்தி விற்கிறேன். அதில் கிடைக்கிற சொற்ப வருமானத்தில் என் தாய், தந்தையைக் கவனித்து வருகிறேன்.

லட்சுமி


வியாபாரம் சம்பந்தமாக ஒரு இடத்திற்குப் போவதற்கோ, ஒருத்தரைச் சந்தித்து பேசுவதற்கோ செல்போன் இருந்தால் வசதியாக இருக்கும். ஆனால் நான் சம்பாதிக்கும் சொற்ப வருமானம் எங்கள் குடும்பத்திற்கு சாப்பாட்டு செலவுக்கே சரியாக இருக்கிறது. அதனால் செல்போன் இல்லாமல் தவித்து வந்தேன். தெய்வம் மாதிரி சேலம் கலெக்டரம்மா எங்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க. என்னைப் போல பார்வையற்றவர்களுக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துகின்ற இந்த செல்போனை கொடுத்த கலெக்டரம்மா நெல்லா இருக்கோணும்'' என்றார்.

பாலமுருகன்

ஆத்தூரைச் சேர்ந்த லட்சுமி, ``நான் பி.எட்., ஆங்கிலம் முடித்திருக்கிறேன். பிறவியிலிருந்தே எனக்குக் கண் பார்வை கிடையாது. எங்க வீட்டுக்காரர் பெயர் அருள் அவருக்கும் பிறவியிலிருந்து கண் பார்வை கிடையாது. அவர் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். சேலம் கலெக்டர் ரோகிணி மேடம் எனக்கும், என் கணவருக்கும் செல்போன் கொடுத்திருக்காங்க. நான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக என் தாய் வீட்டில் இருக்கிறேன். என் கணவரோடு தகவல் பரிமாறிக் கொள்ள இந்த செல்போன் வசதியாக இருக்கும். தாய் உள்ளத்தோடு எங்களுக்கு இந்த செல்போன் கொடுத்த கலெக்டர் மேடம் ரொம்ப நன்றாக இருக்க வேண்டுமெனக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்வேன்'' என்றார்.