``அரசாங்க மருந்தாளர் பணி கிடைச்சிருக்கு'' - ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான திருநங்கை ஸ்வேதா! | First Transgender Pharmacist Swetha talks about her achievements

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (10/06/2019)

கடைசி தொடர்பு:18:47 (10/06/2019)

``அரசாங்க மருந்தாளர் பணி கிடைச்சிருக்கு'' - ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான திருநங்கை ஸ்வேதா!

திருநங்கைகள் ஒடுக்கப்பட்டிருந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது, திருநங்கைகள் பலரும் போராடி தங்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஹெச்ஐவி பாசிட்டிவ் என்கிற உண்மை தெரிந்தும் மனம் தளராமல் போராடி இன்று முதல் திருநங்கை பார்மஸிஸ்ட் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார், திருநங்கை ஸ்வேதா. (பாதிக்கப்பட்டவரின் அனுமதியுடன் அவருடைய பெயர் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன). போராடி தன்னம்பிக்கை மனுஷியாய் மிளிரத் தயாராக இருக்கும் ஸ்வேதாவின் கரடுமுரடான பயணம் குறித்துக் கேட்டோம்.

திருநங்கை ஸ்வேதா

``நான் கிராமத்தைச் சேர்ந்தவள். என்னுடைய குடும்பத்துல நான் ரொம்பவே செல்லம். அம்மா, அப்பான்னு எல்லோருக்கும் என் மேல அளவு கடந்த பாசம். எதுனாலும் எனக்குத்தான் முதல்ல வாங்கிக் கொடுப்பாங்க. சின்ன வயசுல இருந்தே எனக்கு பொண்ணுங்ககூட இருக்கத்தான் பிடிக்கும். ஆம்பளை பசங்களைச் சுத்தமா பிடிக்காது. அப்படித்தான் என் பெண்மையை உணர ஆரம்பிச்சேன். என் குடும்பத்துல உள்ளவங்க என்னைப் பையனா பார்க்கத்தான் விரும்பினாங்களே தவிர என் பெண்மையைப் புரிஞ்சுக்கல.

ஸ்கூல் முடிச்சிட்டு பார்மஸி படிக்க காலேஜ் போனேன். என் குடும்பத்துலேயும் சரி, ஸ்கூல் படிக்கும்போதும் சரி நான் அனுபவிச்ச வலியை விடவும் காலேஜ்ல நான் சந்திச்ச வலி கொடூரமானது. என்னை மாதிரி பெண் தன்மையை உணர்ந்த திருநங்கைகள்கிட்ட மனசுவிட்டு பேச ஆரம்பிச்சேன். அப்போதான் நான் திருநங்கைன்னு எனக்கு தெரிஞ்சது. அவங்ககிட்ட பேசுனதுக்கு அப்புறம் என்னைச் சுற்றி இருந்த கேலி, கிண்டல்களை எல்லாத்தையும் கடந்து வந்தேன்.

திருநங்கை ஸ்வேதா

வீட்டை விட்டு போன்னு என் வீட்ல யாரும் சொல்லலை. அவங்களை இதுக்கு மேல கஷ்டப்படுத்த வேண்டாம்னு நானேதான் வீட்டை விட்டு கிளம்பினேன். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிட்டு இருந்தேன். ஆனா, எனக்கு யாரும் வேலை கொடுக்க தயாராக இல்லை. கடை ஏறுதல், பாலியல் தொழில்னு போகாம நாகரிகமான வேலை செஞ்சு அதில் கிடைக்கிற பணத்தை சேமிச்சு ஆபரேஷன் பண்ணப் போனேன். அங்கே என் ரத்தத்தை பரிசோதிச்சிட்டு எனக்கு ஹெச்ஐவி பாசிட்டிவ்னு சொன்னாங்க. எப்படி எனக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுச்சின்னே தெரியலை. ரொம்பவே முடங்கிட்டேன். எனக்கு அரசு வேலை கிடைச்சும் மருத்துவப் பரிசோதனையைப் பார்த்துட்டு எனக்கு ஹெச்ஐவி இருக்குன்னு தெரிஞ்சா அந்த வேலையும் கிடைக்காதுன்னு அந்த நேர்காணலுக்கும் போகலை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.

அப்போதான் கிரேஸ் அக்காகிட்ட வந்தேன். அவங்க கொடுத்த ஊக்கத்தாலும், என் சமூகம் எனக்கு கொடுத்த அன்பாலும் அதை ஒரு பெரிய விஷயமா நினைக்கிறதை விட்டேன். நான் பார்மஸிஸ்ட் படிச்சிருக்கிறதனால அது சம்பந்தமா ஏதாவது வேலை இருக்கான்னு தேடிட்டு இருந்தேன். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்ல மருந்தாளர் பணிக்கு வேலைவாய்ப்பு இருக்குன்னு சொல்லியிருந்தாங்க. அதுக்கு அப்புறம் அவங்களைச் சந்திச்சு என் சான்றிதழ்களைக் கொடுத்து என் நிலைமையை எடுத்துச் சொன்னேன். அவங்களும் புரிஞ்சுகிட்டு எனக்கு இடம் கொடுத்தாங்க. திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் மருந்தாளர் வேலை கிடைச்சிருக்கு. இப்போ நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் அக்கா... கிரேஸ் அம்மாவுக்கும், என் திருநங்கை சமூகத்துக்கும் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். அவங்க எல்லோரும்தான் நான் இன்னைக்கு வெளிச்சத்துக்கு வந்ததற்கான காரணம். இப்போ எல்லோர்கிட்டேயும் கேட்பேன்.. ஆமா, எனக்கு ஹெச்ஐவி பாசிட்டிவ்தான் அதனால் என்ன?!'' எனப் புன்னகைக்கிறார் இந்தத் தன்னம்பிக்கை மனுஷி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்