`மாசத்துல 2 தடவைதான் வருவாங்க!'- தலைமையாசிரியர்களுக்கு எதிராகப் பள்ளியை முற்றுகையிட்ட பழங்குடியினர் | Ooty tribal school student's parents staged protest

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (10/06/2019)

கடைசி தொடர்பு:16:50 (10/06/2019)

`மாசத்துல 2 தடவைதான் வருவாங்க!'- தலைமையாசிரியர்களுக்கு எதிராகப் பள்ளியை முற்றுகையிட்ட பழங்குடியினர்

நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பழங்குடி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பழங்குடியினர்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது கரிக்கையூர். பழங்குடி இன மக்கள் அதிகம் வாழும் இந்த ஊரில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், 150-க்கும் அதிகமான பழங்குடி மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இரண்டு தலைமை ஆசிரியர்கள் உட்பட 6 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். கரிக்கையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல பழங்குடி கிராமங்களிலிருந்து மாணவ மாணவிகள் முதல் தலைமுறையாக இப்போதுதான் பள்ளிக்கு வருகின்றனர். ஆனால், இந்த பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் முறையாக ஆசிரியர்கள் வருவதில்லை. பழங்குடி மாணவ மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் அக்கறை காட்டுவதில்லை என பெற்றோர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், தொடக்கப் பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் என இரண்டு தலைமையாசிரியர்கள் உள்ளனர். பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இந்தச் சமயத்தில்கூட பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த பழங்குடி மக்கள், இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் வரும்வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என பள்ளி வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பள்ளியில் நடக்கும் குறைபாடுகள்

பெற்றோர்கள் கூறுகையில், "பள்ளிக்குத் தலைமையாசிரியர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே வருகின்றனர். காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து, மாலையில் தேசியகீதம் பாடுவதில்லை. தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், மாணவர்களே சுத்தம்செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.10 மணிக்கு வரும் ஆசிரியர்கள், 2 மணிக்கெல்லாம் கிளம்பிவிடுகின்றனர். உண்டு உறைவிடப் பள்ளியில், பட்டியலில் உள்ள உணவுகளை வழங்குவதில்லை. விடுதிக் காப்பாளரும் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

ஏற்கெனவே, மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக நீலகிரியில் பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவரும் நிலையில், பழங்குடி கிராமத்தில் செயல்படும் பள்ளி ஆசிரியர்கள் இப்படி அலட்சித்துடன் நடந்துகொள்வது, உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.