தி.மு.க.வுக்கு வருகிறார் திருநாவுக்கரசர்!

சென்னை: அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் என பல முகாம்களை பார்த்துக் களைத்துவிட்ட முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அடுத்ததாக தி.மு.க.வுக்கு புறப்பட தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள்!
 

திருநாவுக்கரசர் பி.ஜே.பி.யில் இருந்த போது அதே கூட்டணியில் இருந்த ஜெயலலிதா, அரசருக்கு பாராளுமன்ற தேர்தலில் ஸீட் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே புதுக்கோட்டை தொகுதியை தமது கட்சிக்கு வேண்டும் என கண்டிஷன் போட்டார். இதனால், சொந்தத் தொகுதியை பறிகொடுத்த அரசர், வடமாநிலத்தில் இருந்து மாற்று வழியில் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இருப்பினும் பி.ஜே.பி.யில் நீடிக்க விருப்பமில்லாத அரசர், காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். எந்தக் கட்சிக்கு போனாலும் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை வைத்திருக்கும் திருநாவுக்கரசரின் தனிப்பட்ட செல்வாக்கு காங்கிரஸ் தலைகளுக்கு அவ்வளவாய் பிடிக்கவில்லை. இதனால், தனது அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்து விடும் நிலையில் இருக்கிறார் அரசர்.
 

இந்த நிலையில், அவரை தி.மு.க. பக்கம் தள்ளிக் கொண்டு போக அவரது ஆதரவாளர்களே அச்சாரம் போடுவதாக சொல்கிறார்கள். காங்கிரஸ் தனித்து நின்றால் இந்தத் தேர்தலில் டெபாசிட் வாங்குவதே பெரும்பாடாகி விடும் என களநிலவரங்கள் சொல்லும் நிலையில், 'பேசாமல், தி.மு.க.வில் சேர்ந்து விடுங்கள். நமக்கு பரிச்சயமான ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு ஜாம் ஜாம்னு டெல்லிக்கு போயிடலாம்' என்று திருநாவுக்கரசருக்கு கொம்பு சீவுகிறார்களாம் அவரது ஆத்மார்த்த விசுவாசிகள்.

அவர்களின் இந்த ஆசை இப்போது போஸ்டர்களாகவும் ஃபிளெக்ஸ்களாகவும் வெளிக் கிளம்பி இருக்கிறது. திருநாவுக்கரசரின் இளைய மகன் அன்பரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (11 ஆம் தேதி) சென்னையில் நடந்தது. இதற்காக ஃபிளெக்ஸ்கள் மற்றும் பேனர்களை வைத்திருந்த அவரது ஆதரவாளர்கள், திருநாவுக்கரசரோடு கருணாநிதி படத்தையும் அதுவும் சற்று பெரிதாகவே போட்டிருந்தார்கள். சில பேனர்களில் ஸ்டாலினுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். கூடிய சீக்கிரம் திருநாவுக்கரசர் தி.மு.க.வில் செட்டிலாகப் போவதற்கான க்ரீன் சிக்னல் தான் இது என்கிறது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.  வட்டாரம்!

படங்கள்: வீ.நாகமணி  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!