`சம்பளம் தர மறுக்கிறாங்க!'- மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த முதியவர் | Old man arrested in Virudhunagar after he came to district collector office with Kerosene

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (10/06/2019)

கடைசி தொடர்பு:17:05 (10/06/2019)

`சம்பளம் தர மறுக்கிறாங்க!'- மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் ஆபீஸ் வந்த முதியவர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த முதியவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவைச் சேர்ந்தவர், கருப்பையா. இவர், அங்குள்ள சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காவலாளியாகப் பணிபுரிந்துள்ளார். ஆனால், அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை எனக் கூறி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை சோதனையிட்டனர். அப்போது, அவரது கையில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது. எனவே, சூலக்கரை காவல்துறையினர் அவரை தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர்.

மண்ணெண்ணெய்

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, ``4 ஆண்டுகளுக்கு முன் இவர் வேலை செய்துள்ளார். அப்போது தனக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கவில்லை எனத் தெரிவித்தார். எனவே, சம்பந்தப்பட்ட பிரபு என்ற நபரிடம் விசாரணை நடத்தினோம். அவர், சம்பளத்தை முழுவதும் வழங்கிவிட்டோம். நிலுவை எதுவும் இல்லை என்றார். ஏற்கெனவே ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்திலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர், சம்பளம் தரவில்லை என்கிறார்.  இவர், பாக்கி இல்லை என்கிறார்.  எனவே, தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்திவருகிறோம்'' என்று தெரிவித்தனர்.