`திடீர்ன்னு வீட்டுக்கு வந்தாங்க; அ.தி.மு.க-வில் சேரப்போவதாகப் பரப்புறாங்க!'- பதறும் பச்சைமால் | ADMK cadres speared false informations about me, alleges Former minister K. T. Pachaimal

வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (10/06/2019)

கடைசி தொடர்பு:17:35 (10/06/2019)

`திடீர்ன்னு வீட்டுக்கு வந்தாங்க; அ.தி.மு.க-வில் சேரப்போவதாகப் பரப்புறாங்க!'- பதறும் பச்சைமால்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர் வீட்டிற்குச் சென்று கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பச்சைமால் அசோகன் சந்திப்பு


ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் வனத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர் பச்சைமால். பச்சைமால் அ.தி.மு.க. கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராகவும் இருந்திருக்கிறார். தினகரன் அ.ம.மு.க. தொடங்கிய உடன் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். இப்போது அ.ம.மு.க. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன் நேற்று பச்சைமால் வீட்டிற்கு தனது சகாக்களுடன் சென்றார். அங்கு பச்சைமாலைச் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணையும்படி வேண்டுகோள் விடுத்தார். பச்சைமாலைச் சந்தித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பரப்பினார் அசோகன்.

பச்சைமால் பேட்டி

இதனால் அதிர்ச்சியடைந்த பச்சைமால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``நான் தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வில் தொடர்ந்து இயங்குவேன். நான் வீட்டில் இருந்தபோது திடீரென அசோகன் தலைமையில் வந்த அ.தி.மு.க.வினர் என்னிடம் பேசினர். அப்போது நான் லுங்கி கட்டிக்கொண்டிருந்தேன். அவர்கள் அந்தப் புகைப்படைத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து நான் அ.தி.மு.க.வில் சேரப்போவதாகப் பரப்புகின்றனர்" என்றார்.

இதுகுறித்து அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் அசோகனிடம் கேட்டதற்கு, "அ தி.மு.க.வில் சேரும்படி பச்சைமாலுக்கு அழைப்புவிடுத்தோம். சேருவதும் சேராமல் இருப்பதும் அவரது விருப்பம்" என்றார். அமைதியாக இருந்த அரசியலில் இப்படியும் திடீர் பரபரப்பைக் கிளப்பலாம் என வழிகாட்டியிருக்கிறார் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்.