``குடிக்கத் தண்ணீர் இல்லை; ஆனா, குடும்பங்களைச் சுத்தி கழிவுநீர் ஓடுது!" - புலம்பும் மதுரை மக்கள்! | Madurai area water issues

வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (10/06/2019)

கடைசி தொடர்பு:19:14 (10/06/2019)

``குடிக்கத் தண்ணீர் இல்லை; ஆனா, குடும்பங்களைச் சுத்தி கழிவுநீர் ஓடுது!" - புலம்பும் மதுரை மக்கள்!

அரசு சார்பாக 40 லட்ச ரூபாய் பெரியார்நகர் உட்பட்ட சாமநத்தம் ஊராட்சிக்குக் குடிநீருக்காகச்  செலவு செய்ததாக ஊராட்சியின் ஆன்லைனில் பதிவாகியுள்ளது. ஆனால், அப்படித் திட்டங்கள் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. கிராம சபைக் கூட்டம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறது.

``குடிக்கத் தண்ணீர் இல்லை; ஆனா, குடும்பங்களைச் சுத்தி கழிவுநீர் ஓடுது!

``குடிப்பதற்கு ஒரு சொட்டுக் குடிநீர்கூட இல்லை. அதேநேரத்தில், வசிக்கும் இடத்தைச் சுற்றிக் கழிவு நீர் சூழ ஒரு கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்" என்கின்றனர், மதுரை மாவட்டம் சாமநத்தம் பெரியார் நகர் மக்கள். மேலும், ``இந்தப் பகுதிக்குக் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் தண்ணீர் வழங்குவதாகவும், சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து குடிநீர் வழங்குவதாகவும் இஷ்டத்துக்கு பில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், அதிகாரிகள்" என்று சொல்லும் அப்பகுதி மக்கள், ``இந்தக் கொடுமையை வந்து பாருங்கள்" என்று அவர்கள் நம்மை அழைக்க... நாம் சாமநத்தம் பெரியார் நகர்ப் பகுதியைச் சுற்றிவந்தோம்.

ஊரில் மிகப்பெரிய தண்ணீர்த் தொட்டி இருந்தாலும், அது  சிதிலமடைந்து காணப்படுகிறது. அதில் ஏற்றப்பட்ட தண்ணீர், கசிந்து மழைநீர்போலத் தேங்கியுள்ளது. காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டக் குழாய்கள், கழிவுநீர் கால்வாய்களின்மீது அமைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் கழிவுநீர் செல்ல எந்த ஏற்பாடும் செய்யாததால், கழிவுநீர் தேங்கியிருக்கிறது. குடிக்க தண்ணீர் வசதி இல்லாததால், தனியார் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து வீடுகளுக்கு முன் குடங்களைப் போட்டு வைத்திருக்கின்றனர், அப்பகுதி மக்கள். ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு மையம், குப்பைகளுக்கு நடுவே துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. 

மாரிப்பாண்டிஊரின் நிலைமை குறித்து சமூக ஆர்வலர் மாரிப்பாண்டி, ``மதுரையில் வைகைக் கரையோரம் வெள்ளம் ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு 1989-ல் அப்போது கலெக்டராக இருந்த சந்திரலேகாவால் குடிசைமாற்று வாரியத்தின்கீழ் வீடுகள் வழங்கப்பட்டு பெரியார் நகர் குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை அப்போது செய்தார்கள். ஆனால், போகப்போக அதிகாரிகள் மெத்தனத்தால் குடி தண்ணீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மதுரை நகர்ப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் பெரியார் நகரைச் சுற்றியுள்ள கண்மாய்களுக்கே வந்தடைகிறது. இதனால் நிலத்தடி நீர் சாக்கடை கலந்துதான் கிடைக்கிறது. 

கடந்த 2011-12-ம் ஆண்டில் குடிநீருக்காக ஆர்.ஓ வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட எங்கள் பகுதி மக்கள் குடித்ததில்லை. ஆரம்பித்த நாள் முதல் செயல்படாமல் உள்ளது. ஆனால், கணக்குக் காட்ட எங்கள் பகுதி போர் வாட்டரை அப்படியே டேங்கில் ஏற்றி ஆர்.ஓ வாட்டர் என்று ஏமாற்றுகின்றனர். மிகப்பெரிய சிமென்ட் தண்ணீர்த் தொட்டி அரிமானம் ஏற்பட்டு சிதிலமடைந்து வருகிறது. அதிலும் காவிரி கூட்டுக் குடிநீர் என்ற பெயரில், உள்ளூர் போர் தண்ணீர் ஏற்றப்படுகிறது. சாமநத்தம் கிராமம் வரை வரும் கூட்டுக் குடிநீர், எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதிகாரிகள் எங்கள் கிராமத்தை வஞ்சிப்பதுபோல் செயல்படுகின்றனர். எங்கள் ஊரில் தண்ணீர் கிடைப்பதில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஆர்.ஓ வாட்டர் பிளான்ட்க்கு 5 லட்சம் ரூபாய் செலவு என்று கணக்கு எழுதியுள்ளனர். இதுபோல பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதை விசாரித்து அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

மதுரை மக்கள்

யோகநந்தன், ``எங்கள் ஊரில் குடிநீர்ப் பிரச்னை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. ஊரைச் சுற்றிச் சாக்கடை என்பதால் நிலத்தடி நீரைக்கூட முறையாகப் பயன்படுத்த முடியவில்லை. கிராம சபைக் கூட்டங்களில் அதிகாரிகளிடம் விசாரித்தால் முறையாக எங்களுக்குப் பதில் அளிப்பதில்லை. அரசு சார்பாக 40 லட்ச ரூபாய், பெரியார்நகர் இருக்கும் சாமநத்தம் ஊராட்சிக்குக் குடிநீருக்காகச் செலவு செய்ததாக ஊராட்சியின் ஆன்லைனில் பதிவாகியுள்ளது. ஆனால், அப்படித் திட்டங்கள் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. கிராம சபைக் கூட்டம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறது'' என்றார் வேதனையுடன்.

சையதலி பாத்திமா

சையதலி பாத்திமா, ``குடிநீருக்காக நாள்கணக்கில் தெருவுல நிக்குறோம். குடம் 12 ரூபாய்க்கு வாங்குறோம். தண்ணி வண்டிக்காரங்க வரும்போது காத்திருந்தாதான் கிடைக்கும். இல்லேன்னா சிரமம்தான். தெற்குவாசல் வரை பஸ்ஸில் 13 ரூபாய்க்கு டிக்கெட் செலவுடன் தண்ணி கொண்டுவரவேண்டும். எனவே, அதிகாரிங்க எங்க ஊரை நேரில் பார்வையிட்டுத் தண்ணீர்ப் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

ஜெயலெட்சுமி

ஜெயலெட்சுமி, ``எங்க ஊரில் கிடைக்கும் உப்புத் தண்ணீர்கூடச் சரியில்லை. பிசுபிசுத்துதான் இருக்கும், சாக்கடை வழியாக பைப்புகள் அமைக்கப்பட்டு டேங்கில் தண்ணீர் ஏற்றுவது மோசமானது. மதுரை சாக்கடை முழுவதும் எங்க ஊரச் சுத்தி தேங்கி நிக்குது. அதுக்குள்ளதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். யானைக்கால் போன்ற மோசமான நோய்கள் வந்துவிடுமோ என்று பயத்தில் வாழ்ந்து வர்றோம். எங்க ஊர் கண்மாய்க்கு அனுப்பும் சாக்கடையைச் சுத்தம் செய்து அனுப்புங்க''  என்றார்.

இதுகுறித்து அப்பகுதி பி.டி.ஓ. கண்ணன், ``காவிரி கூட்டுக் குடிநீரின் ஃபோர்ஸ் பைப்புகளில் தண்ணீர்  குறைவாக வருவதால், அங்கு தண்ணீர் சென்றடையவில்லை. காவிரி கூட்டுக் குடிநீர் குறைவாக வரும்போது தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது உப்புத் தண்ணீரை கலந்துவிடுவோம். முழுமையாக நல்ல தண்ணீர் குறைந்து வரும்போது உப்பு நீர் அதிகமாகிவிடுகிறது. தற்போது அதைச் சரிசெய்யச் சொல்லி உள்ளேன். ஆர்.ஓ பிளான்டைப் பொறுத்தவரை, அங்கு போர்வெல் இல்லை என்பதால் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆர்.ஓ மிஷின்கள் நன்றாக உள்ளன. எனவே, இன்னும் சில நாள்களில் கலெக்டரிடம் எஸ்டிமேட் வாங்கி தண்ணீர் வரும்படி செய்கிறோம்'' என்றார்.

வறட்சிக் காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு தமிழகத்தில் இயல்பாக உருவெடுத்துள்ளது. ஆனால், பெரியார்நகர் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் தண்ணீர் கிடைத்தும் அதைக் குடிக்க முடியாமல் காசுக்கு வாங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர்ப் பிரச்னைகள் இப்படியும் ஒரு வழியில் உருவெடுத்துள்ளது என்பது வேதனையின் உச்சம்.


டிரெண்டிங் @ விகடன்